வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:12:24 (13/10/2018)

தேனி மாவட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் - ஓ.பி.எஸூக்கு செக் வைத்த ஜக்கையன்!

கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையனுக்கும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையேயான பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், டாஸ்மாக் விவகாரத்தில் ஜக்கையன் வெற்றி பெற்றுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதியில் இரண்டு தொகுதி எம்.எல்.ஏ க்கள் அ.ம.மு.க துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பக்கமும், மீதம் உள்ள இரண்டு தொகுதி எம்.எல்.ஏ க்கள் ஆளும் தரப்பின் பக்கம் உள்ளனர். அவர்கள், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையனும் ஆவர். ஓ.பன்னீர்செல்வத்திற்கும், ஜக்கையனுக்குமான மோதல் சமீப காலமாக அதிகரித்துவருகிறது. தனது மகனான பாலமணிமார்பனுக்கு பதவி கேட்டு பல முறை பன்னீர்செல்வத்தை அணுகிய ஜக்கையன், ஒரு கட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து மாவட்ட மாணவர் அணி மாவட்டச்செயலாளர் பதவியை வாங்கினார். இதன் பின்னரே இருவருக்கும் இடையேயான பனிப்போர் ஆரம்பமானது.

வெளிப்படையாகப் பன்னீர்செல்வம் கலந்துகொள்ளும் அரசு விழாக்களைப் புறக்கணிக்க ஆரம்பித்தார் ஜக்கையன். இந்நிலையில், கம்பம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் டாஸ்மாக் கடை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி பெண்கள், கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக அவர்களிடம் பேசிய போது, "ஏற்கெனவே எங்கள் பகுதியில் டாஸ்மார்க் அமைக்கக் கூடாது என எம்.பி.பார்த்திபன், மாவட்டச்செயலாளர் சையது கான் ஆகியோருக்கு மனு கொடுத்தோம். டாஸ்மாக் வராது என அவர்கள்  உறுதியளித்தனர். ஆனால், தற்போது சுருளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் கடையை இங்கே திறந்திருக்கிறார்கள்.  இந்த டாஸ்மாக் கடையால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கலாம்" என்றனர்.

இது தொடர்பாக கம்பம் தொகுதி எம்.எல்.ஏ ஜக்கையன் தரப்பினரிடம் கேட்ட போது,"சென்னையில் ஜக்கையன் முகாமிட்டிருக்கிறார். பன்னீர்செல்வம் தரப்பினரிடம் தான், இப்பகுதி மக்கள் முதலில் முறையிட்டனர். அதனால் இன்று வரை டாஸ்மாக் கடை இப்பகுதிக்கு வரவில்லை. பன்னீர் தரப்பிற்கு அழுத்தம் தரவே, சென்னையில் உள்ள ஜக்கையன் எடப்பாடியிடம் பேசி, தேனி மாவட்ட  கலெக்டருக்கு உத்தரவிட்டு டாஸ்மாக் கடையைத் திறக்க வைத்துவிட்டதாகவே பேசப்படுகிறது. இது முதல் வெற்றி தான். இனி போகப்போக பாருங்கள், காட்சிகள் மாறும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொடர்ந்து ஜக்கையன் அழுத்தம் கொடுப்பார்!" என்றனர். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறந்திருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது அந்த டாஸ்மாக் கடை மற்றும் பார், போலீசாரின் பாதுகாப்போடு சிறப்பாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.