வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (13/10/2018)

கடைசி தொடர்பு:08:20 (13/10/2018)

`நான் பாத்ததுனால தான் போராடுனவங்க மேல வழக்கு போட்டுருக்காங்க' -காவல்துறையை சாடும் முகிலன்!

 ஜனநாயக ரீதியில் மணல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பதினான்கு நபர்களை முகிலன் சந்தித்தார் என்பதற்காக காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள மணத்தட்டையில் காவிரி ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. அதோடு, குளித்தலை ராஜேந்திரம் அருகே மணல் கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்த காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். மணல்குவாரி அமைக்கப்பட்டதுக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் முகிலன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்,'மணத்தட்டையில் மணல் குவாரி அமைக்ககூடாதுன்னு உயர்நீதிமன்றம் சொல்லி இருக்கு. அதை மீறி அங்கே மணல் குவாரி அமைத்துள்ளார்கள். அதேபோல், ராஜேந்திரத்தில் மணல் கிடங்கு இயக்கவும் இன்னும் அனுமதி தரலை. அதற்குள் அங்கு அதிகாரிகள் மணல் கிடங்கு அமைத்திருக்கிறார்கள். இதற்கு துணையாக இருப்பது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமின்னு மக்கள் பேசிக்கிறாங்க. மணத்தட்டையில் மணல் குவாரி இயங்க அனுமதிக்க கூடாது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முகிலன்இந்நிலையில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்று பதினான்கு பேர் மணத்தட்டை மணல் குவாரியை முற்றுகையிட சென்றனர். அங்கே விரைந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் அவர்களை கைது செய்து குளித்தலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்களை விடுவிக்கதான் அங்கே அடைத்து வைத்தார்கள். ஆனால் அவர்களை விடுவிக்கவில்லை. முன்னதாக அவரகள், முகிலன் சென்று சந்தித்தார்.  இது தொடர்பாக பேசிய அவர், "முறைகேடாக நீதிமன்ற உத்தரவையும் மீறி மணத்தட்டையில் மணல் குவாரி அமைத்துள்ளார்கள். அதனால், அதை மூட வலியுறுத்தி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை  கைது செய்த போலீஸார், மாலை வரை வைத்திருந்து விடுவிக்க ஏதுவாக தனியார் திருமண மண்டபத்தில அடைத்தனர்.

ஆனால், நான் சென்று பார்க்க போன போது, போலீஸா என்னை முதலில் அனுமதிக்கலை. உடனே ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸார் என்னை சூழ்ந்துட்டாங்க. அவர்களிடம் போராடிதான் உள்றே போய் கைதானவர்களை பார்க்க முடிந்தது. நான் அவர்களை பார்த்ததால், அந்த பதினான்கு பேர் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை நான் முன்கூட்டியே உணர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியருக்கு போன் போட்டு விபரம் சொன்னேன்.

'நீதிமன்ற உத்தரவை மீறி தொடங்கப்பட்ட மணல்குவாரியை மூடனும்ன்னு வலியுறுத்தி ஜனநாயக வழியில் போராடியவர்கள் மீது போலீஸ் கேஸ் போட போவுது. தடுத்து நிறுத்துங்க'ன்னு சொன்னேன். நான் சொன்னதை கேட்டுட்டு, 'உடனே அதை தடுக்கிறேன். அப்புறம் உங்களிடம் பேசுறேன்'ன்னார். ஆனா, சொன்னபடி அவர் தடுக்கவும் இல்லை; என்னிடம் பேசவும் இல்லை. கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட பதினான்கு பேரையும் குளித்தலை நீதிபதி ரிமாண்ட் செய்துவிட்டார். திருச்சி சிறையில அவர்களை அடைச்சுட்டாங்க. இந்த அரசு எந்த ரூபத்திலும், யாரும் தங்களுக்கு எதிராக போராடகூடாதுன்னு நினைக்குது. இந்த போக்கு அபாயகரமானது. பதினான்கு பேரையும் உடனே விடுதலை பண்ணலன்னா, மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்" என்றார்.