வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (13/10/2018)

கடைசி தொடர்பு:12:52 (13/10/2018)

`இது விகடனால் சாத்தியமானது' - புதுக்கோட்டை பள்ளி ஆசிரியர் நெகிழ்ச்சி!

டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குறித்த குறும்படத்தைப் பார்த்த அரசுப் பள்ளி மாணவர்கள், 'அக்னிச் சிறகுகள்', 'இந்தியா 2020' ஆகிய புத்தகங்களைப் படிக்க விரும்பியது குறித்த கட்டுரையைக் கடந்த 15.3.2018 அன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தக் கட்டுரைக்குப் பிறகு, அந்தப் பள்ளிக்கு  அக்னிச் சிறகுகள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. இப்போது அந்த மாணவர்களுக்கு  அபாகஸ் கற்றல் கருவிகள் கிடைத்துள்ளன.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ளது, உருவம்பட்டி. இந்தக் கிராமத்தில்  உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்துவருகின்றார்கள். இந்த  மாணவர்களுக்கு, விகடன் கட்டுரையைப் படித்த சென்னையில் உள்ள கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் சார்பில், ஆசிரியர்கள் மற்றும் 30 மாணவர்களுக்கு இந்தியன் அபாகஸ் உபகரணங்கள் மற்றும் பயிற்சி ஏடுகள் வழங்கப்பட்டன. இது தொடர்பாக அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பொன்னழகு, பெ.துரையரசன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி, இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி ஆய்வாளர் வேலுச்சாமி, கல்வியாளர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சதீஸ்குமார், அன்னவாசல் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு, வட்டார வள மையப் பயிற்றுநர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், கலாம் அறப்பணி நல்இயக்கச் செயலாளர் பார்த்தசாரதி, உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நிலையபட்டி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன், “அபாகஸ் கணித முறை மூலம் எண்களைக் கணிதத்தை எளிமையாகக் கற்றுக்கொள்ள முடியும். அதோடு, பிரெய்ன் ஸ்கில் என்று சொல்லக்கூடிய மூளைவளர்ச்சி அபாரமானதாக இருக்கும். அபாகஸை முழுமையாகக் கற்றுக்கொண்ட ஒருவரால் எவ்வளவு பெரிய கடினமான கணக்குக்கும், கால்குலேட்டரை விட வேகமாக விடை காணமுடியும். இதனால், மாணவ மாணவியருக்கு  மனதை ஒரு முகப்படுத்தும் சக்தி அதிகரிக்கும். கல்வி மட்டுமன்றி சொந்த வாழ்க்கையிலும் சிக்கலான நேரங்களிலும் உடனடியாக முடிவெடுக்கக்கூடிய திறன் மிக்கவர்களாக இருப்பர். மேலும், கிராமப்புற மாணவர்கள் அப்துல் கலாமை முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டால், அனைவரும் சாதிக்கலாம்” என்றார்.

மாணவர்கள்

கலாம் அறப்பணி நல் இயக்கத்தின் நிறுவனர் தலைவர்  சுதா, “குழந்தைகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் மதிப்புகளின் அடிப்படையில் குழந்தைகளைத் தேர்வுசெய்து, நேர்மறை சிந்தனையாளர் விருதும், மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர், சமூக ஆர்வலர்களுக்கு விருதுகள் வழங்கிவருகிறோம். கடந்த 3 வருடங்களாகப் பல்வேறு  மாவட்டத்தில்  உள்ள பள்ளிகளுக்கு அபாகஸ் உபகரணங்களும் ஆசிரியர்களுக்குப் பயிற்சியும் வழங்கிவருவதுடன், விருதுகளும் வழங்கிவருகிறோம். எங்களது முக்கிய நோக்கம், நேர்மறை எண்ணங்களை அரசுப் பள்ளி மாணவர்களிடம் விதைக்க வேண்டும் மற்றும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்” என்பதே என்றார்.

இதுகுறித்து அந்தப் பள்ளி ஆசிரியர் முனுசாமி, ``கடந்த  மார்ச் மாதம்,  'கலாம் சலாம்' குறும்படம் இந்தப் பள்ளியில் திரையிடப்பட்டது.  அதைப் பார்த்த மாணவர்கள், மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய, 'அக்னிச் சிறகுகள்', 'இந்தியா 2020' ஆகிய புத்தகங்களைப் படிக்க வேண்டும்  என்கிற ஆசை  இருப்பதாகக்  கூறினார்கள். மாணவர்களின் இந்த ஆவலை  விகடன் அப்படியே வெளியிட்டது.  அந்தக் கட்டுரையைப் படித்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுதா என்பவர், பள்ளி மாணவர்களுக்கு அக்னிச் சிறகுகள் உள்ளிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கினார். அவர்,  நண்பர்களுடன் இணைந்து நடத்திவரும் கலாம் அறப்பணி நல் இயக்கத்தின்   மூலமாக,  அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அபாகஸ் உபகரணம் இலவசமாக வழங்க உள்ளதாகவும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக, 'வளரும் நேர்மறைச் சிந்தனையாளர்' என்ற விருதை வழங்குவதாகவும் தெரிவித்தார்.   

மேலும்,  பள்ளிக்கு   இந்தக் கல்வியாண்டில் அபாகஸ் உபகரணங்களை  வழங்குவதாக  உறுதியளித்திருந்தார்.  அந்த வகையில் எங்கள்  பள்ளி மாணவர்களுக்கு அபாகஸ் பயிற்சி மற்றும் கல்வி உபகரணங்கள் தற்போது கிடைத்துள்ளன. சிறப்பாகப் பணியாற்றிய  ஆசிரியர்களுக்கு  விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த அங்கீகாரம், விகடன் மூலம் கிடைத்ததைப் பெருமையாகச் சொல்லிக்கொள்கிறோம்” என்றார் மகிழ்ச்சியுடன்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க