வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:11:48 (13/10/2018)

‘மணல் கடத்தல்னு போன் பண்ணீங்க, கேஸ் போட்டு ஜெயில்ல அடைச்சிருவேன்’- மண்ணச்சநல்லூர் தாசில்தார் மிரட்டல்!


திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள  காவிரி, கொள்ளிடம், அரியாறு, கோரையாறு  ஆகிய ஆறுகளில் அதிக அளவில் 'மணல் கொள்ளை' நடந்து வருகிறது என்கிற குற்றச்சாட்டுகள் உள்ளன. அதைத் தடுக்க, திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். வருவாய்த் துறை அலுவலர்கள், இரவு பகலாக ரோந்து செல்லவும் உத்தரவிட்டுள்ளார்.  அதையடுத்து, வருவாய் அதிகாரிகள்  குழுக்களாகப் பிரிந்து ரோந்து செல்கிறார்கள். இதேபோல, திருச்சி  மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் உள்ள  கோரையாற்றில்  நடக்கும் மணல் கடத்தலைத் தடுக்க, இரு மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகளும் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்கள். 

ரேணுகா தேவி

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி இரவு, மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற  விராலிமலை தாசில்தார் பார்த்திபன் என்பவர் சாலை விபத்தில் பலியானதுதான் பரிதாபம். இதேபோல, கடந்த 10-ம்தேதி திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் வருவாய்த் துறை அதிகாரிகள் மணல் கொள்ளையைத் தடுக்க ரோந்து சென்றனர். அப்படி ரோந்துக்கு பைக்கில் சென்ற பிள்ளாபாளையம்  கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன் என்பவரை கட்டுவிரியன் பாம்பு கடித்து,  மிகவும் ஆபத்தான சூழலில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இப்படி  மணல் கடத்தலுக்கு எதிராக ஒரு பக்கம் அதிகாரிகள் உயிரைப் பணையம்வைத்து  பணியாற்றிவரும் சூழலில்தான், சில வருவாய்த் துறை அதிகாரிகள் மணல் கடத்தலுக்குத் துணை போகிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகாதேவி, மணல் கடத்தலுக்குத் துணைபோனதாக நாள்ளிரவில் பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரை அடுத்த திருவாசி பகுதியில் உள்ள  கொள்ளிடம் ஆற்றில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு  மணல் குவாரி செயல்பட்டது.  தற்போது குவாரி மூடப்பட்டாலும், இரவு நேரங்களில் லாரிகளில் மணல் அள்ளுவதாகக்  குற்றச்சாட்டு  எழுந்தது.  இதுகுறித்து  அப்பகுதி மக்கள்  வருவாய்த் துறை  அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தாலும், நடவடிக்கை இல்லை என்கிறார்கள்.

இந்நிலையில்  நேற்று இரவு 1மணியளவில், திருவாசி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் பொக்லைன்  வாகனம்மூலம்  மூன்று லாரிகளில்  மணல் அள்ளப்படுவதாக  மண்ணச்சநல்லூர் தாசில்தார் ரேணுகாதேவிக்கு  தகவல்  கொடுத்துள்ளார்கள்.  அதற்கு அவர்,  “மணல் அள்ளுவதைத் தடுக்க எங்களுக்குத் தெரியும். உங்க வேலையைப் பாருங்க. மீறி போன் செய்தால், அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிடுவோம்” என  மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மணல் கடத்திய நந்தக்குமார்

இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள்,மணல் லாரிகளை விரட்டினர். அதற்குள் இரண்டு லாரிகள் போய்விட, ஒரு லாரி மட்டும் சிக்கியது. லாரியில் இருந்தவரிடம் விசாரித்ததில், அவர் மண்ணச்சநல்லூரை  அடுத்துள்ள ச.அய்யம்பாளையம்  கிராமத்தைச் சேர்ந்த பாளையா மகன் நந்தகுமார்  என்பவர் எனத் தெரியவந்தது.  மேலும் நந்தகுமார், தாசில்தார்  ரேணுகாதேவி சமயபுரம் பகுதியில்  கட்டிவரும்  புதிய வீட்டுக்கு மணல் அடித்துச் செல்கிறோம் எனச் சொல்லவே, அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அங்கு  வந்த தாசில்தார்  ரேணுகாதேவியை அவரது வாகனத்துடன்   சிறைப் பிடித்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் கூடவே அங்கு தகவலறிந்து விரைந்து வந்த மண்ணச்சநல்லூர் போலீஸார் லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் நந்நகுமார் மற்றும் தாசில்தார்  ரேணுகாதேவி மற்றும் அவரது  வாகனத்தையும் மீட்டனர்.

இந்நிலையில்  திருவாசி கிராமத்தைச் சேர்ந்த விவசாய ஒருங்கிணைப்பு குழுதலைவர் அன்புசெழியன், மணல் கடத்தலுக்கு துணைபோன தாசில்தார்  ரேணுகாதேவி மீது குண்டர் சட்டத்தின்படி  நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் துறையில் புகார் கொடுத்தார். இந்நிலையில்  மணல் கடத்தல் வழக்கில் லாரி உரிமையாளர் நந்தகுமார்  மற்றும் அவரது  லாரி ஓட்டுநர்   உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தாசில்தார் ரேணுகாதேவியோ, “மணல் கடத்தல் குறித்து தகவலறிந்ததும், அங்குச் சென்ற தான் மணல் கடத்தலுக்கு துணைபோவதாக சித்தரிக்கிறார்கள் என்றும், லாரி ஓட்டுநரை மிரட்டி எனக்காக மணல் கடத்தப்பட்டதாக கூறவைத்து அதனை வீடியோ எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

மணல் கொள்ளைக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர்  சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு அரசாணை   வெளியிட்டுள்ளதுடன் இதுகுறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு  உத்தரவு போடப்பட்டுள்ளது. இப்படியான சூழலில் திருச்சி மாவட்டத்தில் மணல் கொள்ளைக்கு தாசில்தார் ஒருவரே துணை போனதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க