வெளியிடப்பட்ட நேரம்: 11:27 (13/10/2018)

கடைசி தொடர்பு:11:27 (13/10/2018)

‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ - தமிழக அரசு மேல்முறையீடு

'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்ய வேண்டும்'  என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். தமிழக அரசே தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்தது. இந்த ஆணையம், கடந்த ஜூன் மாதம் முதல் தனது விசாரணையை நடத்திவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில்  243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., மாரிராஜா தலைமையிலான போலீஸார் விசாரணையையும் நடத்தினர். இந்நிலையில், 243 வழக்குகளில் சிப்காட் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட  173 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில்     15-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார்  சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை சில நாள்களுக்கு முன்பு ஒப்படைத்தனர். சி.பி.ஐ  துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர், இது தொடர்பாக இன்னும் ஓரிரு நாள்களில் தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்க உள்ளனர். முதல் கட்டமாக 20 அமைப்புகள்மீது 12 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இந்நிலையில்,  இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல்செய்துள்ளது. அந்த மனுவில், “துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி விசாரணை செய்ய தமிழக அரசு ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது அவசியம் இல்லாத ஒன்று. இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்; மீண்டும் தமிழக அரசே விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க