வெளியிடப்பட்ட நேரம்: 10:46 (13/10/2018)

கடைசி தொடர்பு:10:58 (13/10/2018)

”தமிழர்கள் இணைந்தால் எந்த நாட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றலாம்” - கயானா பிரதமர்

”தமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம்” என்று கயானா நாட்டின் தமிழ்ப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கயானா பிரதமர்

உலகத் தமிழர் பொருளாதார நிறுவனம் மற்றும் சென்னை வளர்ச்சிக் கழகம் சார்பில் 5-வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியில் இன்று தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டை திறந்துவைத்துப் பேசிய கயானா நாட்டு பிரதமர் மோசஸ் வீராசாமி, “வெறும் 4 சதவிகித தமிழர்கள் மட்டுமே எங்கள் கயானா நாட்டில் வசிக்கின்றனர். ஆங்கிலேய காலனி ஆதிக்க காலத்தில், தென் இந்தியாவிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அவர்கள். சிறுபான்மையினராக வாழ்ந்துவரும் தமிழர்களில் இருந்து ஒருவர் அங்கு பிரதமராக வருவது இதுவே முதல் முறை. சிறுபான்மையினராக வாழும் தமிழர்களும், ஆப்பிரிக்க இனத்தவர்களும் இணைந்து, 6 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியிருக்கிறோம்.

சிறுபான்மையினர்கள் இணைந்து செயல்பட்டால் வெற்றிபெற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் இது. உலக அளவில் வசிக்கும் தமிழர்கள் இதேபோல இணைந்து செயல்பட்டால், எளிதில் முன்னேற முடியும். உலகில் எந்த நாட்டில் வாழும் தமிழர்களாக இருந்தாலும் அவர்கள் இணைந்து செயல்பட்டால் அங்கு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்.  கயானா நாட்டில் இயற்கை எரிவாயு வளம் அதிகமாக உள்ளது. ஆனால், அதில் எங்களுக்கு போதிய அனுபவம் இல்லை. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அந்தத் துறையில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம். அதேபோல, சுரங்கத் தொழிலிலும் கயானா நாட்டில் முதலீடு செய்யலாம்” என்றார்.

பொருளாதார மாநாடு

அவரைத் தொடர்ந்து பேசிய மொரீஷியஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, “பிரான்ஸ் காலனி ஆதிக்கத்தால் ஐந்து தலைமுறைக்கு முன்பு மொரீஷியஸ் நாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்ட தமிழர்கள், அங்கு கரும்புத் தோட்டங்களில் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்டனர். ஐந்து தலைமுறைகளாக கடினமாக உழைத்த அவர்கள், இப்போது பொருளாதார அளவில் வலுவாக உள்ளனர். உலகில் மிகச்சிறந்த நாகரிகத்தைக் கொண்டவர்கள் தமிழர்கள். 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற உயர்ந்த சிந்தனை உடையவர்கள். மொரீஷியஸ் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்ந்து நன்றாக இருப்பதால், அங்கு முதலீட்டாளர்கள் அதிகமாக வருகின்றனர். அதேபோல, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வர்த்தக நுழைவு வாயிலாகவும் மொரீஷியஸ் இருப்பதால், அங்கு தமிழர்கள் முதலீடு செய்ய அதிகம் முன்வர வேண்டும். ஆப்பிரிக்க சந்தையில் நீர்,  தகவல் தொழில்நுட்பம்,  போக்குவரத்து,  சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுசெய்ய அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  உலக அளவில் அதிக திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படுவது மொரீஷியஸ் நாட்டில்தான். எனவே, திரைப்படம் சார்ந்த தொழிலிலும் அதிக முதலீடு செய்யலாம். மொரீஷியஸ் நாட்டுக்கும், இந்திய நாட்டுக்கும் இடையே ரத்த உறவு இருக்கிறது. அதனால்தான் அங்கு மருத்துவமனை,  கல்வி,  சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளுக்கு இந்தியா கூடுதல் நிதி ஒதுக்கியிருக்கிறது” என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க