`உரிமை இல்லை; பதவி விலகுங்க!'- முதல்வர் பழனிசாமிக்கு எதிராகப் பாயும் வைகோ | vaiko urges edappadi palanisamy to resign the cm post

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:12:00 (13/10/2018)

`உரிமை இல்லை; பதவி விலகுங்க!'- முதல்வர் பழனிசாமிக்கு எதிராகப் பாயும் வைகோ

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலைத் துறை ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகத் தெரிவித்துள்ளார், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ.

வைகோ

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தமிழக நெடுஞ்சாலைத் துறையில் நடந்த ஒப்பந்தப் பணிகள் ஒதுக்கீட்டு ஊழல் குறித்து தி.மு.க தொடர்ந்த வழக்கில் விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் முதல்வருக்கு நற்சான்று அளித்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஜூலை மாதம், தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் நாகராஜன், செய்யாதுரை ஆகியோர்கள் தொடர்புடைய எஸ்.பி.கே. ஸ்பின்னர்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.பி.கே. ஹோட்டல்ஸ், எஸ்.பி.கே அண்ட் கோ எக்ஸ்பிரஸ்வே பிரைவேட் லிமிடெட், ஸ்ரீபாலாஜி டோல்வேஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றில் வருமான வரித் துறையினர் சோதனைகள் நடத்தினர். இந்தச் சோதனைகளில், ரூ.180 கோடி பணமும், 105 கிலோவுக்கும் அதிகமான தங்கமும் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. எஸ்.பி.கே குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் நாகராஜன், எடப்பாடி பழனிசாமியின் உறவினர் பி.சுப்பிரமணியம் நடத்திவரும் வெங்கடாஜலபதி அண்ட் கோ நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் நான்கு வழிச் சாலை விரிவாக்கப் பணி, மதுரை வட்டச்சாலைப் பணி, வண்டலூர் - வாலாஜா நான்கு வழிச் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றும் பணி உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் இந்த நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. மேலும் திருவள்ளூர், கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களின் கீழ் வரும் நெடுஞ்சாலைத் துறை சாலைகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளின் ஒப்பந்தங்களும் முதல்வரின் உறவினர் பி.சுப்பிரமணியம் தொடர்புடைய நிறுவனங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளன.

3120 கோடி ரூபாய் மதிப்புடைய டெண்டர்கள், முதல்வரின் உறவினர் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதில் விதிமுறைகள் மீறப்பட்டு, முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த ஊழல் முறைகேட்டை அம்பலப்படுத்திய தி.மு.க தான், உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, துறைதோறும் தொட்டதெல்லாம் ஊழல், ஊழல், ஊழல் என்று ஊழல் சேற்றில் மூழ்கிக் கிடக்கிறது. உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலைத் துறை ஊழல்குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதால்,  எடப்பாடி பழனிசாமி முதல்வர் பொறுப்பில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை. எனவே, அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஊழல் அரசுக்கு முட்டுக்கொடுக்க நினைப்பவர்களைத் தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க