வெளியிடப்பட்ட நேரம்: 12:22 (13/10/2018)

கடைசி தொடர்பு:12:22 (13/10/2018)

2 ஆண்டுகளில் '3103 ஏக்கர்' கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன - அறநிலையத்துறை அமைச்சர் பதில்

"கோயில்களில் நடைபெற்ற சிலை களவு நிகழ்வுகள் பெரும்பாலும், அந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக தனியார் நிர்வாகிகளின் பொறுப்பில் இருந்த காலத்தில் நடைபெற்றதாகும்."

2 ஆண்டுகளில் '3103 ஏக்கர்' கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன - அறநிலையத்துறை அமைச்சர் பதில்

றநிலையத்துறை உருவாவதற்கு முன்னரே தமிழக கோயில்களில் சிலை காணாமல் போயிருப்பதாகவும், மேலும் கடந்த இரண்டாண்டுகளில் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 3102.54 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 691 கிரவுண்டு 1177 சதுர அடி பரப்பளவுள்ள மனைகளும், 237 கிரவுண்டு 1591 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகக் கோயில்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த  சொத்து விபரங்கள், கோயில் திருப்பணிகள், சிலைகள் கடத்தல் குறித்த விபரங்களை, அத்துறையின் அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார். அதில் ''2016 நவம்பர் முதல் நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் கருத்துகளின் அடிப்படையில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1723 திருக்கோயில்களில் ரூபாய் 102.14 கோடி செலவில் திருப்பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நடத்தப்பட்டது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 76 திருக்கோயில்களில் ரூ.52.44 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 124 திருக்குளங்கள் ரூபாய் 83 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன. 49 திருத்தேர்கள் ரூபாய் 18.04 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டன. இத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கிராமப்புறத்தில் அமைந்துள்ள 1481 திருக்கோயில் திருப்பணிகளுக்கு, திருக்கோயில் ஒன்றுக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் ரூபாய் 14.81 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை

இந்து சமய அறநிறுவனங்கள் அதன் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில், இந்து சமய அறநிலையக் கொடைகள் சட்டப்பிரிவு 46-ன்படி பட்டியலைச் சார்ந்த நிறுவனங்கள் என்றும், சட்டப்பிரிவு 49-ன்படி பட்டியலைச் சாராத நிறுவனங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் மொத்தம் 38,646 அறநிறுவனங்கள் உள்ளன. இவற்றில் நிதி வசதி உள்ளவை 4,553 மட்டுமே. நிதி வசதி இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.10,000 க்கும் குறைவாகப் பெறும் அறநிறுவனங்கள் 34,093 ஆகும். நிதி வசதி இல்லாத நலிவுற்ற திருக்கோயில்களில் பின்வரும் மேம்பாட்டுப் பணிகளை இத்துறை செவ்வனே செய்து வருகிறது. நிதி வசதியற்ற ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜை செய்திட உதவும் வகையில் இத்திட்டம் 1986-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதி வசதியற்ற 241 திருக்கோயில்களில் ஒரு கால பூஜைத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 12,745 திருக்கோயில்கள் தலா ரூ.1 இலட்சம் வைப்பு நிதியுடன் பயனடைந்து வருகின்றன. சேவூர் ராமச்சந்திரன்

கோயில் சொத்துகள்:

இந்து சமய அறநிறுவனங்களுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருந்த 3102.54 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களும், 691 கிரவுண்டு 1177 சதுர அடி பரப்பளவுள்ள மனைகளும், 237 கிரவுண்டு 1591 சதுர அடி பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன.  இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3082.68 கோடி ஆகும். மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை கண்டறிய, கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர் மற்றும் திருக்கோயில் நிர்வாகிகள் கொண்ட குழுக்கள் அனைத்து திருக்கோயில்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களால் இதுவரை 35,973 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன.
மாண்புமிகு முதலமைச்சரின் அறிவுரையின்படி, 35,371 திருக்கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் குறித்த விவரம் வருவாய்த் துறையின் ‘தமிழ் நிலம்’ கணினிப் பதிவுகளுடன் திருக்கோயில் நில விவரங்களைச் சரிபார்த்து ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணி விரைந்து முடிக்கப்படும்.

இதுவரை 9,996 வாடகைதாரர்கள் ரூ.24.03 கோடி தொகையினை செலுத்தியுள்ளனர். நிலுவைத் தொகையினை செலுத்தாத நபர்களைத் திருக்கோயில் சொத்துகளிலிருந்து வெளியேற்றிட சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
1.7.2016 முதல் மொத்தமுள்ள வாடகைதாரர்களில் 24,475 வாடகைதாரர்களுக்கு நியாய வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு, நிலுவைத் தொகை உட்பட வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள வாடகைதாரர்களுக்கு சட்டப்படி நியாய வாடகை மறு நிர்ணயம் செய்யும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. தனி நபர் பெயரில் பட்டா மாற்றப்பட்டுள்ள திருக்கோயில் சொத்துகள் கண்டறியப்பட்டு மீண்டும் திருக்கோயில் பெயரில் பட்டா மாற்றம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4,745 கோயில்களுக்குப் சொந்தமான 25,110.46 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களுக்கு மேல்முறையீடுகள்  தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை 1,049 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 6,839.54 ஏக்கர் பரப்பளவுள்ள சொத்துகள் திருக்கோயில் பெயரில் மீண்டும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கோயில்

சிலைகள்:

கோயில்களில் நடைபெற்ற சிலை களவு நிகழ்வுகள் பெரும்பாலும், அந்தக் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படுவதற்கு முன்பாக தனியார் நிர்வாகிகளின் பொறுப்பில் இருந்த காலத்தில் நடைபெற்றதாகும். உதாரணமாகத் திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருள்மிகு குலசேகரமுடையார் திருக்கோயிலில் இருந்த நடராஜர் சிலை 1982ல் களவாடப்பட்டு தற்போது ஆஸ்திரேலிய நாட்டு அருங்காட்சியகத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இத்திருக்கோயில் 1998ல்தான் இத்துறையின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு திருக்கோயில்களில் நடைபெற்ற பெரும்பான்மையான சிலை களவு நிகழ்வுகள் துறை ஆளுகையின் கீழ் வருவதற்கு முன்பாக பல்வேறுபட்ட தனியார் நிர்வாகத்தில் இருந்தபோது நடைபெற்றவையாகும்.  திருக்கோயில்களின் சிலைகள் பாதுகாப்பு தொடர்பாக இத்துறையின் ஆளுகையின் கீழுள்ள திருக்கோயில்களில் 3,42,000 சிலைகள் குறித்த முழுமையான அளவீட்டு விபரங்கள் 4-கோணப் புகைப்படங்களுடன் கணினியின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. திருக்கோயில்களின் பாதுகாப்பிற்கென 5024 களவு எச்சரிக்கை மணி, 1609 கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உறுதியான இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. 2599 பகல் மற்றும் இரவு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

திருக்கோயில்களின் பாதுகாப்பிற்காக 1,000 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் 3000 முன்னாள் படைவீரர்கள் கொண்ட திருக்கோயில் பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி இத்துறைக்கென 2000 காவலர்கள் கொண்ட திருக்கோயில் பாதுகாப்பு படை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
நிதி வசதி குறைந்த திருக்கோயில்களில் உள்ள சிலைகளை பாதுகாக்கும் பொருட்டு 34 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையங்கள் கட்டப்பட்டு, இதுவரை 19 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்தப் பாதுகாப்பு மையங்களில் 8,128 உலோகத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.  


டிரெண்டிங் @ விகடன்