வெளியிடப்பட்ட நேரம்: 14:31 (13/10/2018)

கடைசி தொடர்பு:13:13 (14/10/2018)

'விஜய் அரசியலுக்கு வருவதால் அவர்களுக்கு அச்சம்!’ - எஸ்.ஏ.சந்திரசேகரன்

``நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. ஆனால், அவர் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்'' என அவரது  தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்  தெரிவித்தார்.

நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்

144 வருடங்களுக்குப் பின்னர், தாமிரபரணி நதியில் மகாபுஷ்கரம் விழா நடைபெற்றுவருகிறது. 12 நாள்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் 3-ம் நாளான இன்று, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் கட்டங்களில் புனித நீராடிவருகின்றனர். குறிப்பாக, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகைதந்து, தாமிரபரணி நதியில் புனித நீராடி வழிபடுகிறார்கள். மகாபுஷ்கரம் விழாவை முன்னிட்டு நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரன், இன்று நெல்லை மாவட்டம் பாபநாசம் பகுதிக்கு வந்தார். அங்கு, தாமிரபரணி நதியில் தனது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடி வழிபட்டார். 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். மக்கள்மீது அக்கறைகொண்ட அனைவருமே அரசியலுக்கு வரத் தகுதியானவர்கள். அதனால்தான், ’அரசியலுக்கு வந்தால் என்ன தவறு’ என்று நடிகர் விஜய் ஏற்கெனவே கேள்வி எழுப்பினார். வழக்கறிஞர்கள், விவசாயிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அப்படி அனைத்துத் தரப்பினரும் அரசியலுக்கு வரும் நிலையில், மக்களால் உயர்த்தப்பட்டவரான நடிகர் விஜய், மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. அவர் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள். அவரைப் பார்த்துப் பயப்படுகிறார்கள். விஜய்யைப் பொறுத்தவரை, ஒரு நடிகர் என்பதைவிடவும் ஒரு தமிழ்ப் பிரஜையாக அவர் மக்களுக்கு நல்லதுசெய்ய வேண்டும் என விருப்பப்படுகிறேன். ஒரு தந்தையாக அதுதான் என் விருப்பம். 

நான் பிறப்பால் கிறிஸ்துவனாக இருந்தாலும், இந்தியாவில் பிறந்ததால் இந்து மதத்தைப் பின்பற்றுகிறேன். கடந்த பல ஆண்டுகளாக ஆன்மிகத்தில் ஆர்வம் காட்டிவருகிறேன். பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று வந்திருக்கிறேன். சத்குரு ஜக்கி வாசுதேவ் என்னை ஆன்மிகவாதியாக மாற்றினார்’’ என்று தெரிவித்தார்.