வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (13/10/2018)

கடைசி தொடர்பு:14:46 (13/10/2018)

சூப்பர் குரு சங்கரின் நிறைவேறாத நீண்ட நாள் ஆசை! - பகிரும் நண்பர்கள் 

சங்கரின் நிறைவேறாத ஆசை

சங்கர் ஐஏஎஸ் அகாடமியை நடத்திய சங்கர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பத் தகராறு காரணமாக சங்கர் இறந்தார் என்று சொல்கின்றனர் போலீஸார். சங்கரின் மரணம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நேரத்தில், அவரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறவில்லை என்கிறார்கள், அவரின் நெருங்கிய நண்பர்கள். 

அண்ணா நகர் திருமங்கலம் பஸ் நிலையம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்து, அதில் ஐஏஎஸ் அகாடமியை  ஆரம்பித்தவர் சங்கர். அவரின்  ஐஏஎஸ் அகாடமியின் பெயர் பிரபலமானதால், சங்கரும் அசுர வளர்ச்சியடைந்தார். அண்ணா நகர் சாந்தி காலனியில் சொந்தமாக இடம் வாங்கி, சங்கர் ஐஏஎஸ் அகாடமியை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார். அந்த விழாவில், ஆளுநர் ரோசய்யா, முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கலந்துகொண்டனர். சங்கர் ஐஏஎஸ் அகாடமியை விரிவுபடுத்த, பெங்களூரு, திருச்சியில் கிளைகளைத் தொடங்கினார். அதே நேரத்தில், சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு போட்டியாக சென்னையில் உருவெடுத்த ஒரு ஐஏஎஸ் அகாடமியால் சில சங்கடங்கள்  அவருக்கு ஏற்பட்டது.  இது, சங்கருக்கு கடும் கவலையை  உண்டாக்கினாலும், விடாமுயற்சியோடு போராடினார்.

மாணவர்களின் சேர்க்கை அதிகமானதால், தற்போது அண்ணா நகரில் செயல்பட்டுவரும் சங்கர் ஐஏஎஸ் அகாடமிக்கு எதிரில்  இன்னொரு கட்டடத்தை அவர் கட்டிவந்துள்ளார். அதில், 70 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளநிலையில், மீதமுள்ள பணிகள் முடிந்த பிறகு சினிமாவில் நடித்துப் பெயர் வாங்க வேண்டுமென்பது அவருக்கு ஆசை. மிமிக்ரியும் நன்றாகச் செய்வாராம். சினிமாவில் நடிக்கும் தன்  நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற சங்கர் காத்திருந்தார்.

சங்கரின் ஐ.ஏ.எஸ் அகாடமி

சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் முழு பொறுப்பையும் மனைவி வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு சினிமாவில் நடித்து நல்ல நடிகர் என்ற பெயரை பெற வேண்டும் என்பதுதான் சங்கரின் ஆசை. ஏற்கெனவே சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர்களுடன் நட்பில் இருந்துவந்த சங்கருக்கு அதற்கான கால சூழலும் காத்திருந்தது.  மிமிக்கிரியில் கலக்கும் சங்கருக்கு நடிப்பு என்பது அவரின் உயிரோடு கலந்த ஒன்றாகும். பாடம் எடுக்கும்போதுகூட சங்கர், சினிமா காட்சிகளைச் சுட்டிக்காட்டுவதுண்டு என்கின்றனர் அவரிடம் பயின்ற மாணவர்கள்.  சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட சங்கரின் நீண்ட நாள் கனவு இன்னும் சில மாதங்களில் நிறைவேறிவிடும் என்று காத்திருந்தார். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதற்குள் அவர், தற்கொலை செய்துகொண்டதை ஜீரணிக்க முடியவில்லை என்கின்றனர் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர். 

சங்கரையும் அவரின் ஆரம்ப கால நண்பர் சந்துருவையும் அடிக்கடி சாந்தி காலனி 4-வது அவென்யூவில் உள்ள பிளாட்பார கடைகளில் பார்க்கலாம். பெயரும் புகழும் பெற்றபிறகுகூட பிளாட்பார கடைகளுக்குச் சென்ற சாதாரண மனிதர்களைப் போலவேதான் வாழ்ந்தார் சங்கர். சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியில் ஓராண்டு பயிற்சி பெற சற்றேறக்குறைய ஒரு லட்சத்தைத் தாண்டுமாம். ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற கனவோடு சங்கரைச் சந்திப்பவர்களுக்கு கட்டணத்தில் சலுகைகளை அள்ளி கொடுப்பார். ஒருமுறை தோல்வியடைந்தாலும் கட்டணமே வசூலிக்காமல் மீண்டும் வாய்ப்புகளை பலருக்கு சங்கர் கொடுத்துள்ளார். 

 சங்கர் மட்டுமல்லாமல் அவரின் மனைவி வைஷ்ணவியும் க்ளாஸ் எடுப்பதுண்டு. சங்கரின் சகோதரி பிருந்தா ஒடிசாவில் கலெக்டராக பணியாற்றுகிறார். சங்கருக்கு இரண்டு பெண் குழந்தைகள். சங்கரிடம் படிக்கும் மாணவிகள் வயதில் குறைவாக இருந்தாலும் `மேடம்' என்றுதான் அழைப்பார்.  எல்லோரிடமும் மரியாதையாக பேசுவார். சங்கரின் மாணவரான ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், தற்போது சென்னை மாநகர காவல்துறையில் உயர்பதவியில் இருக்கிறார். அவர்தான் நேற்று காலை முதல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தேவையான உதவிகளைச் கண்ணீர்மல்க செய்தார். சங்கர், இறப்பதற்கு முன்கூட பொன்னேரியில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் பேசிவிட்டுதான் வீட்டுக்கு வந்துள்ளார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்திய சங்கர், ஏன் இந்த தற்கொலை முடிவை எடுத்தார்?!