வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (13/10/2018)

கடைசி தொடர்பு:13:50 (13/10/2018)

`வேண்டாமென்று சொல்லல; திணிக்காதீங்க!'- கோவை நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தி எழுத்துகள் அழிப்பு!

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில், மைல்கற்களிலுள்ள இந்தி எழுத்துகளை சமூக ஆர்வலர் பெரியார் மணி கருப்பு மை கொண்டு அழித்தார்.

மைல்கல் இந்தி

நாட்டின் தேசிய நெடுஞ்சாலையின் முழு நிர்வாகமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. எனினும் சாலைகளின் பராமரிப்பு தேசிய நெடுஞ்சாலை ஆணையகம், மாநில பொதுப்பணித்துறை, எல்லைச்சாலை அமைப்பு எனும் மூன்று அமைப்புகள் மூலமே நிர்வகிக்கப்படுகிறது. தற்போதைய  நிலையில், நாட்டின் மொத்த தேசிய நெடுஞ்சாலையின் தூரம் 65,600 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகளில் பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்களில் அந்த மாநில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தி மற்றும் ஆங்கிலத்துக்கு அடுத்த இடம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ் நாட்டின் எல்லை மேற்கு நகரமான கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலைகளில் உள்ள ஊர் பெயரைச் சுட்டிக்காட்டும் மைல்கற்களில் ஆங்கிலத்தை அகற்றிவிட்டு முதலில் இந்தி, இரண்டாம் இடத்தில் தமிழ் எழுதப்பட்டுள்ளது. இதற்குத் தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, அந்த மைல்கற்களை, கருப்பு மை கொண்டு அழிக்கும் போராட்டத்தில் பெரியார் மணி ஈடுபட்டார்.

இதுகுறித்து பெரியார் மணி, “நாங்கள் இந்தி வேண்டாம் என்று கூறவில்லை. இந்தியைத் திணிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறோம். இந்தித் திணிப்பை காலம் காலமாக எதிர்த்து வருகிறோம். இந்தித் திணிப்பை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் இந்தியைத் திணிக்காதீர்கள். மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்கிறோம்” என்றார்.