வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (13/10/2018)

கடைசி தொடர்பு:15:20 (13/10/2018)

"நீதிபதிகள் வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள் என்பதை மாற்றவேண்டிய தருணம் வந்துவிட்டது!" -சி.பி.ராதாகிருஷ்ணன்

சி.பி.ராதாகிருஷ்ணன்

"நீதிபதிகள் வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள் என்பதை மாற்றவேண்டிய தருணம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்'' என்று மத்திய கயிறு வாரியத் தலைவர்  சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

'சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான அனைத்து பெண்களும்  செல்லலாம்' என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு  ஒருபக்கம் ஆதரவும் மறுபக்கம் எதிர்ப்பும்  கிளம்பி, பெரும் சர்சைக்குள்ளாகிவருகிறது. இந்நிலையில், கோவை ஐயப்ப சேவா சங்கத்தினர், கோவையில்  ஆர்ப்பாட்டமும் பேரணியும் நடத்தித் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் இருந்து  ஊர்வலமாகப் புறப்பட்ட பெண்களும், ஐயப்ப பக்தர்களும் கோவை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பு வந்து பேரணியை முடித்தார்கள். 

இறுதியாக செய்தியளார்களைச் சந்தித்த மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், "ஆசாமிகளைக்கூட சாமிகளாக மாற்றக் கூடியவர் ஐப்பன்.  சாதாரண ஐயப்ப பக்தர்கள் ஆசாமிகளே. புதிதாக சட்டம் படித்தவர்களும், பகுத்தறிவுவாதிகளும் ஐயப்பனை எப்படி வணங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கக் கூடாது.  இந்து தர்மம்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும். சட்டம் படித்தவர்கள்  புதுப்புது அர்த்தங்கள் சொல்வது சரியல்ல. உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய  மூன்று தீர்ப்புகள் பண்பாட்டை, கலாசாரத்தைக் காப்பாற்றும்படி இருக்கின்றதா என்பதை நீதிபதிகள் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

நீதிபதிகள் வானளாவிய அதிகாரம் படைத்தவர்கள் என்பதை மாற்றவேண்டிய தருணம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன். நீதிபதிகள் புதுப்புது தீர்ப்புகள் தருகின்றனர்.  அது ஒழுக்கக் கேட்டிற்கும், மனக் கட்டுப்பாட்டைத் தகர்க்கும் விதமாகவும் இருக்கின்றதே ஒழிய, மனித ஒழுக்கத்தை பேணிக் காப்பதாக இல்லை. மனிதனும், விலங்கும் வேறு வேறு என்பதை உணர்த்தும் விதமாக தீர்ப்புகள் இருப்பதுதான் மனித சமூகத்துக்கு நல்லது'' என்று கூறினார்.