வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (13/10/2018)

கடைசி தொடர்பு:16:20 (13/10/2018)

காதலன் கண்முன்னே காதலியைக் கடத்திய கும்பல்! - தடுத்த 3 பேருக்கு சரமாரி வெட்டு

கன்னியாகுமரி அருகே, காவல் துறை விசாரணைக்கு காரில் வந்த காதல் ஜோடியை வழிமறித்து, 15 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி, காதலியை கடத்திச்சென்ற வழக்கில், ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருமணக் கோலத்தில் காதல் ஜோடி

கன்னியாகுமரி மாவட்டம், ஒசரவிளை பெருமாள்புரத்தைச் சேர்ந்த ஓவியர் ஜெயபால், நாம் தமிழர் கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ளார். இவருடன் பணிக்குச் சென்ற அதே ஊரைச் சேர்ந்த ஸ்டாவினுக்கும், ஜெயபால் மகள் டிக் ஷோனாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 5 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்துவந்துள்ளனர். இவர்கள் காதலுக்கு இரண்டு வீட்டிலும்  எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்த 10-ம் தேதி, ஜெயபால் தனது குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடற்கரைச் சாலையில் உள்ள கழிவறைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு சென்ற டிக் ஷோனா, நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பல இடங்களில் தேடிப் பார்த்தனர். கிடைக்காததால், கடந்த 11-ம் தேதி கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், ஜெயபாலின் வாட்ஸ் அப்பில் ஸ்டார்லினும், டிக் ஷோனாவும் திருமணக் கோலத்தில் உள்ள புகைப்படம் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயபால், காதல் ஜோடியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.

சிகிச்சை பெறும் காதலன்

இதற்கிடையில், காவல் துறையில் புகார் இருந்ததால் விசாரணைக்காக காதல் ஜோடி மற்றும் அவரது உறவினர்கள் காரில் வந்து கொண்டிருந்தனர். கார் கோவளம் அருகே சென்றபோது, பின்பக்கமாக மூன்று காரில் வந்த 15-க்கும் மேற்பட்டவர்கள், காதல் ஜோடி வந்த காரின் முன்னும் பின்னும் இடித்தனர். டிரைவர் உடனே காரை நிறுத்தினார். 3 காரில் இருந்து இறங்கிய 15 பேர் கொண்ட கும்பல், காதல் ஜோடியை  அடித்து உதைத்தனர். காரின் பின் இருக்கையில் இருந்த ஸ்டார்லினை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். மேலும், ஸ்டார்லின் உறவினர்கள் சுரேஷ்  (44), அருள் (58) ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. விரைந்து செயல்பட்ட அந்தக் கும்பல், டிக் ஷோனாவை மற்றொரு காரில் கடத்திச் சென்றது. தகவலின்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், டிக் ஷோனாவின் அப்பா ஜெயபால், உறவினர்கள் செல்வம், ஸ்ரீதேவ், துரைராஜ் உள்ளிட்ட 15 பேர்மீது வழக்கு பதிவு செய்தனர். அதில், துரைராஜ் என்பவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.