வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (13/10/2018)

கடைசி தொடர்பு:16:40 (13/10/2018)

அ.தி.மு.க-வுக்கு விரைவில் பெண் தலைமை! - செல்லூர் ராஜூ புதுத்தகவல்

``இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணத்தில் பேருந்து இயக்கப்படுவது தமிழ்நாட்டில்தான்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பெறுமிதம் கொண்டுள்ளார்.

செல்லூர் ராஜூ

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களுக்கு புதிய பேருந்துகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கொடியசைத்து இன்று தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழ்நாடு அரசு  போக்குவரத்துக் கழகம் சார்பாக மதுரைக்கு 32 புதிய பேருந்துகள் வந்துள்ளன. அதில், இன்று  5 புதிய பேருந்துகள்  தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. புதிய பேருந்துகளை அதிகப்படுத்துவதால், பயணிகள் வெகுவாகப் பயனடைவார்கள். இந்தியாவிலேயே மிக குறைந்த கட்டணத்தில் பேருந்து இயக்கப்படுவது தமிழ்நாட்டில்தான். படிப்படியாக புதிய பேருந்துகள் வாங்கப்பட்டவுடன், பழைய பேருந்துகள் நிறுத்தப்படும்.

ஒரு ஊழல் குற்றச்சாட்டை சிபிஐ-க்கு மாற்றுவதால் முதல்வர் பதவி விலகணும் என்றால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முதல்வர் பதவியில்  இருக்க முடியாது. எல்லார் மேலயும் குற்றச்சாட்டு வந்துள்ளது. ஆனால், தமிழக முதல்வர் எடப்பாடி சிறப்பான ஆட்சியைத்தான் தமிழகத்தில் வழங்குகிறார். முதல்வரின் கீழ்  காவல்துறை, நுண்ணறிவுப் பிரிவு உட்பட பல துறைகள் வருவதால்,  சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சியோ இதற்கு பதவி விலக வேண்டும் என்று சொல்கிறது. நாட்டில் எல்லோரும் முதல்வர் மீது குற்றச்சாட்டு  சொல்லுவது வழக்கம். அதற்கெல்லாம் முதல்வர் பதவி விலகணுமா? அப்படி என்றால் நாட்டில் யாருமே ஆட்சி நடத்த முடியாது'' என்று காட்டமாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மதுரை சிந்தாமணி பகுதியில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா, ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெண்கள் சைக்கிள் பேரணியில் பங்கேற்க உள்ள பெண்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, வளர்மதி, ராஜலெட்சுமி, திண்டுக்கல் சீனிவாசன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் ராஜன் செல்லப்பா, சரவணன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, "வரும் காலத்தில் யாராவது ஒரு பெண் அ.தி.மு.க-வை வழி நடத்தும் காலகட்டம் வரும். ஆண்களுக்கு நிகராக இந்த இயக்கத்தை வழி நடத்தக்கூடியவர்கள் பெண்கள்தான். இந்த ஆட்சி மக்களுக்கான ஆட்சி.
சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, தொண்டனாக இருந்து இன்று முதலமைச்சாராக எடப்பாடி உள்ளார். விரைவில் இந்த இயக்கத்துக்கு பெண்களின் தலைமை வரும்" என்று கூறினார்.