வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:17:00 (13/10/2018)

“நீ இதெல்லாம் சொல்லக் கூடாது” - பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ

”முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சலைத் துறை டெண்டர் முறைகேடு புகாரை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என தி.மு.க. தொடர்ந்த வழக்கு மீண்டும் தி.மு.க-வுக்கே திரும்பும்” என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில், புதிய வழித்தடங்களில் 6 புதிய பேருந்துகளைத் தொடங்கிவைத்தார் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ. இதன் பின்னர் செய்தியாளார்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் பொது மக்களுக்கு குடிக்க குடிநீர் கிடைக்கவில்லை. ஆனால், டாஸ்மாக் கடைகளில் தட்டுப்பாடு இல்லாமல் மதுபானம் கிடைக்கிறது என கமல்ஹாசன் தேவையில்லாமல் குற்றம் சாட்டியுள்ளார். அவர் எந்த நாட்டில் இருந்துகொண்டு அவ்வாறு பேசுகிறார் எனத் தெரியவில்லை. எந்த நாட்டில் உள்ள டாஸ்மாக் மயக்கத்தில் அவ்வாறு பேசினார் எனவும் தெரியவில்லை. தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ள நேரத்திலும்கூட குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. குடிநீருக்கு, முன்னுரிமையின் அடிப்படையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் ரூ.4,800 கோடி அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி, தி.மு.க தரப்பில்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில்  தி.மு.க-வுக்கு எதிராகவே திரும்பும். அ.தி.மு.க-வின் ஆட்சியில் விடுக்கப்பட்ட டெண்டரைவிட கூடுதல் பணத்துக்கு டெண்டர் அளித்தது தி.மு.க தான்.

’தானாகவே வலையில் விழுந்தது’ என்ற பழமொழியைப் போல  தானாகவே வலையில் விழுந்துள்ளது தி.மு.க., இந்த சிபிஐ விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளது. தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர் கருணாஸ். தற்போது சுயேச்சை எம்.எல்.ஏ போல தினகரன், ஸ்டாலின் என ஒவ்வொருவராக சந்தித்துவருகிறார். அரசியலில் ஒருவர் மற்றொருவரை சந்திப்பது என்பது சாதாரணமானது. அ.தி.மு.க சின்னத்தில் வெற்றிபெற்ற அ.தி.மு.க கொறடாவுக்குக் கட்டுப்பட்டவர். அவரது அந்தச் சந்திப்பு வரம்பு மீறும்போது, கொறடாவுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியைப் பொறுத்தவரை அரசு நிகழ்ச்சிகளில் கட்சி நிகழ்ச்சிகளைப் போல அதிகாரிகளை மறைத்துக்கொண்டு, அமைச்சருடன் அ.தி.மு.க-வினர் சூழ்ந்து நிற்பது வழக்கம். அதேபோல இன்றும் புதிய பேருந்துகளை அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கும்போது,  பத்திரிகையாளர்களைப் படம் எடுக்கவிடாமல் அ.தி.மு.க-வினர் சூழ்ந்து நின்றனர். இதனால், கட்சியினரை பத்திரிகையாளர்கள் விலகி நிற்கச் சொன்னார்கள். அப்போது நிருபர் ஒருவர், ”பிரஸ் போட்டோ எடுப்பதற்கு வசதியாக ஒரு பக்கமாக அமைச்சர், அதிகாரிகள் நின்றால் வசதியாக இருக்கும்” என பி.ஆர்.ஓ-விடம் கூறினார். ஆனால், அமைச்சர் கடம்பூர் ராஜூ குறுக்கிட்டு, “நீ இதெல்லாம் சொல்லக் கூடாது” என்றார். ”பத்திரிகையாளர்களை ஒருமையில் ஏன் பேசினீர்கள்” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எனது துறை செய்தித்துறை. நான் செய்தியாளர்களை மதிப்பவன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். இதனால், அந்த இடத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க