வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (13/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (13/10/2018)

`கொள்முதலும் செய்யல; அறுவடையும் செய்ய முடியல!' - அமைச்சர் துரைக்கண்ணு தொகுதியில் அவலம்

``தொகுதியில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யவில்லை. இதற்கு, சாக்கு பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதனால், அறுவடைக்கு தயாராக இருந்தும் பல விவசாயிகள் அறுவடை செய்யாமல் உள்ளனர். இதனால், நெல் கதிர்கள் வயலிலேயே சாய்ந்து முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தொகுதியிலேயே இந்த அவலம் நடக்கிறது'' என விவசாயிகள் வேதனையோடு குற்றம் சாட்டுகிறார்கள்.

அமைச்சர் துரைக்கண்ணு தொகுதி அவலத்தை கூறும் விவசாயி

தஞ்சாவூர் பகுதிகளில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடைசெய்த நெல்லை கொள்முதல் செய்யாததால், நெல் முளைத்துவிடுவதாகக் கூறி, தொடர்ந்து சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்திவந்தனர். இந்தநிலையில், உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உடனடியாக  விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தார். ஆனாலும், இன்னும் பல இடங்களில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அவ்வப்போது பெய்யும் மழையில்,  நெல்  நனைந்து முளைக்கத் தொடங்கியது. இது ஒரு புறம் இருக்க, நெல் கொள்முதல் செய்யப்படாததால், பல வயல்களில் நெல் கதிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தும் அறுவடை செய்யாமல் உள்ளனர். இதனால் நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து வீணாக தொடங்கியுள்ளது என வேதனையோடு தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.

இதுகுறித்து விவசாயி சிவக்குமாரிடம் பேசினோம். ``என் ஊர் நல்லவன்னியன் குடிக்காடு. வேளாண்மை அமைச்சர் துரைக்கண்ணு தொகுதியில்தான் என் ஊர் வருகிறது. ஏழு ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தேன். அறுவடைக்குத் தயாராக  நெல் கதிர்கள் இருந்தும் நெல்லை அறுவடை செய்ய முடியவில்லை. கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்யாததே இதற்குக் காரணம். கடந்த வாரத்தில் பல இடங்களில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து, மெயின் சாலையில் உள்ள கொள்முதல் நிலையங்களில் மட்டும்  கொள்முதல் செய்யத் தொடங்கினர். உள்ளடங்கியவாறு உள்ள கிராமங்களில் இன்னும் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. எங்க ஊர் கொள்முதல் நிலையத்தில் கேட்டால் குறைந்த அளவு சாக்குகளே அரசு அனுப்பியுள்ளது. அவை தீர்ந்துவிட்டது. சாக்கு வந்தால்தான் நெல் கொள்முதல் செய்வோம் என்கின்றனர்.

 நெற்கதிர்கள் வயலிலேயே சாய்ந்து கிடக்கிறது

நெல் கொள்முதல் செய்யவில்லை என்றால், அறுவடை செய்த நெல்லை எங்கே வைப்பது என்ற பயத்தில் நான் இன்னும் அறுவடை செய்யாமலேயே இருக்கிறேன். பயிர்செய்து அறுவடைக்குத் தயாராகி நிற்கும் கதிர்களைக்கூட சரியான நேரத்தில் அறுவடை செய்யாமல் விக்கித்து நிற்கிறோம். இப்படியே போனால், வயலில் சாய்ந்துவிட்ட நெல் கதிர்கள் அவ்வப்போது பெய்யும் மழையில் நனைந்து  முளைக்க  ஆரம்பித்துவிடும். என்ன செய்வதெனப் புரியாமல் பல விவசாயிகள் தவித்துவருகிறோம். நேரத்தில் அறுவடை செய்யப்படாததால், அடுத்த நடவுக்கு நாற்று விட்டு வைத்திருந்தோம் . அவையும் காயத் தொடங்கிவிட்டன. பல இன்னல்களில் சிக்கித் தவித்தே ஒவ்வொரு விவசாயியும் விவசாயம் செய்துவருகிறான். வெயில், மழை என இவற்றிலிருந்து குழந்தையைப் போல பயிரைக் காப்பாற்றி, அதை சரியான நேரத்தில் அறுவடைசெய்து காசாக்கும் நேரத்தில்கூட அரசு விவசாயிக்கு உறுதுணையாக இல்லாமல் இருக்கிறது. அதுவும் வேளாண்மைத் துறை அமைச்சர் இருக்கும் தொகுதியிலேயே இந்த அவலம் நடப்பது வேதனைக்குரியது'' என்றார்.

அதே ஊரைச் சேர்ந்த மாரியம்மாள் என்பவரிடம் பேசினோம். ``ஒரு ஏக்கர்ல பயிர் செய்யப்பட்ட நெல் அறுவடைக்குத் தயாராக நிற்கிறது. 10 தினங்களாகக் கொள்முதல் நிலையத்துக்கு நடையாக நடக்கிறேன். ஏம்மா இப்படி அலைஞ்சுகிட்டே இருக்க. சாக்கு இல்லை. அரசு என்ன சொல்லுதோ அதைத்தான் நாங்கள் செய்ய முடியும் என அக்கறையே இல்லாமல் சொல்கிறார்கள். இல்லப்பா நான் அறுவடை செய்து இங்கு கொண்டுவந்து கொட்டிப்புடுவேன். அப்புறம் நீங்க எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அது இங்கேயே கிடந்து முளைக்கத் தொடங்கிவிடும். அதைப் பார்க்கிற தைரிய மனசு எனக்கில்லை. அதான் அப்படியே வயிலிலேயே இருக்கட்டும் என விட்டு வைத்துள்ளேன் என சொன்னேன். விளைந்த நெல்லைக்கூட காப்பாற்ற முடியாமல், கதிர்கள் வயலிலேயே சாய்ந்து மடிவதை எந்த விவசாயியும் விரும்ப மாட்டான். சீக்கிரமே அரசு இதில் அக்கறையோடு நடவடிக்கை எடுத்து விவசாயிகள் வயித்துல பாலை வார்க்க வேண்டும்'' என்றார்.

விவசாயிகள் மறியல்

விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களோ, ``காவிரி டெல்டா மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளின் நிலையும் இப்படித்தான் உள்ளது. உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு இருக்கும் தொகுதியிலேயே  முறையாக நெல் கொள்முதல் செய்யப்படாததால், பல பேர் இன்னும் அறுவடையே செய்யாமல் இருக்கிறார்கள். இதனால், விவசாயிகள் பல துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். இந்நிலையைப் போக்க, துரித நடவடிக்கை எடுக்காமல் அமைச்சர் காமராஜ் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது என்றும், துரைக்கண்ணு போதிய சாக்குகள் கையிருப்பு உள்ளது என்றும் பேட்டி மட்டுமே கொடுத்து கொண்டிருக்கிறார்கள்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க