வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (13/10/2018)

கடைசி தொடர்பு:18:40 (13/10/2018)

அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தெருத் தெருவாக வழங்கிய பிரசுரங்கள்!

பேரிடர் மேலாண்மை தினத்தையொட்டி, மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு வழங்கினர்.

பேரிடர் விழிப்புஉணர்வு துண்டுபிரசுரம் வழங்கிய அமைச்சர்கள்

 

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன் கீழ், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தால், பேரிடர் மேலாண்மை தொலை நோக்குத் திட்டம் 2018- 2030-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  தற்போது, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரிடர் விழிப்பு உணர்வு நடத்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மைத் தினத்தையொட்டி மாணவ, மாணவிகளின் விழிப்பு உணர்வுப்  பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், செவிலியர்கள் , துப்புரவுப் பணியாளர்கள் , தனியார் அரசுக் கல்லூரி மாணவர்கள் , மாணவிகள் , பொதுமக்கள் என்று பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் , மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன், மாநகராட்சி ஆணையர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் தெருத் தெருவாகச் சென்று விழிப்பு உணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி உதயகுமார்,” தேசிய பேரிடர் தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில் 39 வருவாய் மாவட்டங்களில் இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தற்போது தொடங்க உள்ள பருவ மழையையொட்டி, தமிழகத்தில் 4,399 இடங்கள் பாதிப்புள்ள இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.  தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்தபோது, 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. மேலும், தமிழகத்தில் தொடங்க உள்ள பருவ மழை கால பேரிடர் பணிக்காக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது'' என்று தெரிவித்தார்.