வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (13/10/2018)

`ஒரு குடம் குடிநீர் எட்டு ரூபாய்!' - ஆவடியில் தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பஞ்சம்

 தண்ணீர் விநியோகிக்கும் தனியார் டேங்கர் வாகனம்

ஆவடி நகராட்சியில் வழங்கப்படும் தண்ணீர், துணி துவைப்பதற்கும் குளிப்பதற்கும், பாத்திரம் கழுவுவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவித்த பொதுமக்கள், ஒரு குடம் குடிநீர் எட்டு ரூபாய்க்கு வாங்குகிறோம் என்று வேதனையுடன் கூறினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு பகுதியில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதமாக, அங்குள்ள அம்பேத்கர் நகரில் குடிநீர் விநியோகம் குறைந்துள்ளது. பலமுறை அரசு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால், அதிகாரிகள் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை. இதனால், இன்று பொதுமக்கள் அரக்கோணம்- திருவள்ளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், போலீஸார் பொதுமக்களிடம் சமரசம் பேசி மறியலை கைவிடச்செய்தனர். இதனால், 20 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தண்ணீர் டேங்கர் வாகனத்தில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ்

இதேபோல, ஆவடி பகுதிகளில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. ஆவடி, திருமுல்லைவாயல், கோவர்த்தனகிரி, காமராஜர் நகர், ஹவுசிங்போர்டு, பட்டாபிராம், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் டேங்கர் வண்டிகளை நம்பியே பொதுமக்கள் இருந்துவருகின்றனர். ஒரு குடம் தண்ணீர் எட்டு ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆவடி நகராட்சியில் வழங்கப்படும் தண்ணீர், துணி துவைப்பதற்கும் குளிப்பதற்கும் பாத்திரம் கழுவுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. குடிப்பதற்குத் தனியார் தண்ணீர் வண்டியை நம்பியே உள்ளனர். அதற்கும் வேட்டுவைப்பதைப் போல நிலத்தடி நீரை எடுப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், தொடர்ந்து பொது மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய முடியாது என்று தனியார் குடிநீர் வண்டிகளில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனால், ஆவடி வட்டார பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.  அரசு உடனடியாக சரிசெய்யுமா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.