வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (13/10/2018)

கடைசி தொடர்பு:18:20 (13/10/2018)

`ரூ.100-க்கு 1.50 காசு வட்டி!'- கடனுக்கு டீசல் வழங்கும் தனியார் நிறுவனம்

வாகன ஓட்டிகளுக்கு கடன் வழங்கும் தனியார் பெட்ரோல் பங்க்

விக்கிற விலைக்கு கடன் வாங்கித்தான் வண்டிக்கு பெட்ரோல் போடணும்னு பலரும் நொந்துபோய்ப் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், தற்போது அது உண்மையாகிவிட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான் டீசல் வாங்க கடன் கொடுக்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது, ஒரு தனியார் நிறுவனம்.

நாட்டில் இருசக்கர வாகனங்கள் வாங்கவும், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கவும்தான் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறோம். ஆனால், சமீபத்தில் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலையின் அபரிமிதமான உயர்வு, இனி வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூட கடன் வாங்கும் நிலைக்கு மக்களைத் தள்ளியிருக்கிறது. அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட தனியார் நிறுவனம் இன்று,  முதற்கட்டமாக வாகனங்களுக்கு டீசல் வாங்க கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

திருப்பூரில் இன்று நடைபெற்ற அதன் அறிமுக விழாவில் பேசிய நிர்வாகிகள், "ஸ்மைலேஜ் எனும் திட்டத்தின்மூலம் டீசலுக்கு கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அதன்படி இத்திட்டத்தின் மூலமாக 100 ரூபாய்க்கு டீசல் போடுபவர்களிடம், மாதம் ரூபாய் 1.50 தொகை வட்டியாக வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், டீசல் போட்டதற்கான பணத்தை விரைவாக திருப்பிச் செலுத்தும்போது, நாள்கள் அடிப்படையிலான வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். வாகனத் தொழிலில் ஈடுபட்டுள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனங்களுக்கும், அடிக்கடி காரில் வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் இந்த டீசல் கடன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார்கள்.