வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:19:00 (13/10/2018)

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டி! - அன்புமணி திடீர் அறிவிப்பு

புதிய பேருந்துகளை முதல்வர் கொடி அசைத்துத் தொடங்கிவைப்பதால், அரசுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார்.

அன்புமணி ராமதாஸ்

கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அன்புமணி, “முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருப்பதை வரவேற்கிறோம். நெடுஞ்சாலைத் துறையில், கடந்த 7 ஆண்டு காலமாக ஊழல் நடைபெற்றுக்கொண்டுள்ளது என ஆளுநர் ரோசைய்யா மற்றும் பன்வாரிலாலிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஆர்.எஸ். பாரதி தொடுத்த வழக்கில் முகாந்திரம் உள்ளது என்றும், அதைத் தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளி வராது. எனவேதான், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்துள்ளார்கள். எனவே, இந்தச் சூழலில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் அல்லது ஆளுநர் அவரைப் பதவி நீக்கம்செய்ய வேண்டும். இது, தமிழ்நாட்டுகு மிகப்பெரிய அவமானம். பதவியில் உள்ள ஒரு முதல்வரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்வதெல்லாம் மேலும் மேலும் அவமானங்கள் குவிந்துகொண்டிருக்கின்றன. நெடுஞ்சாலைத் துறை மட்டும் அல்ல, அனைத்துத் துறைகளிலும் ஊழல் குவிந்துள்ளது. ஊழலில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது. அனைத்துத்  துறைகளிலும் ஊழல் நடந்துகொண்டுள்ளது.

ஆளுநர், உயர் கல்வித் துறையில் துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறிவிட்டு, மறுநாள் மாற்றிக்கொண்டார். ஓர் ஆளுநர், ஊழல் நடந்துள்ளது என்று கூறுவது தவறு. அவர்தான் அதை விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார். ரஃபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் 550 கோடி ரூபாய். இந்த ஆட்சியில் 1600 கோடி ரூபாய்க்குப் பேசி உள்ளார்கள். இதற்கு, அணில் அம்பானி நிறுவனம் ஆப்செட் பார்ட்னராக உள்ளது. நான்கு நாள்கள் பயணம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன் வந்த பிறகு, அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க வேண்டும் .

போக்குவரத்துத் துறைக்கு ஊதியம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு ஊதியம் வழங்குங்கள். தனியார் போக்குவரத்துக் கழகம் லாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் அரசுப் போக்குவரத்து நட்டத்தில் உள்ளது. இதற்குக் காரணம் ஊழல். உதிரிப் பாகங்கள் வாங்குவதில் இருந்து, புதிய பேருந்துகள் வாங்குவது வரை ஊழல்தான். 450 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு, ஒரு மாத காலமாக நின்றுகொண்டிருக்கிறது. அதை எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்துதான் தொடங்கிவைப்பாராம். இதனால், 33 கோடி ரூபாய் நஷ்டம் தமிழக அரசுக்கு. இவர்களுடைய நோக்கம் கொள்ளையடிப்பது. அத்தனை அமைச்சர்களும் இன்னமும் ஒரு சில மாதங்களில் சிறையில் இருப்பார்கள். ஆளுநர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 7 பேர் விடுதலையில் 2 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜ.க-வுக்குத் தெரியாதா... ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஊழல்செய்வதும் ஒன்று, ஊழலை ஆதரிப்பதும் ஒன்று. நிச்சயமாக நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவோம்” என்றார்.