வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (13/10/2018)

கடைசி தொடர்பு:19:30 (13/10/2018)

'நீதி மன்றங்கள், கல்லூரிகளை இடிக்க முடியுமா?' - வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிராகக் கொதித்த சீமான்!

தமிழகத்தில் பல நீதிமன்றங்கள், கல்லூரிகள் நீர் பிடிப்பு பகுதிகளில்தான் உள்ளன. அவற்றையெல்லாம் இடிக்க முடியுமா? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். 

சென்னை அம்பத்தூரிலுள்ள கொரட்டூர் ஏரிப் பகுதியில், 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகட்டி வசித்துவருகின்றனர். அவர்கள், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொரட்டூர் ஏரியைச் சுற்றி மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர், கங்கை நகர் ஆகிய பகுதிகளில் வசித்துவருகின்றனர். இந்த நிலையில், நீர் நிலைப் பகுதிகளிலுள்ள வீடுகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை முன்னிறுத்தி அம்பத்தூரில் குளத்துக்குள் அமைந்துள்ள வீடுகளை இடிக்கும் பணியில் வருவாய் அதிகாரிகள் ஈடுபட்டனர். நேற்று, 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. இன்று, 200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன.

வீடுகள் இடிக்கப்பட்ட இடத்துக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பேசும்போது, 'பொதுமக்களை இந்த இடத்திலிருந்து அகற்றி என்ன செய்யப்போகிறார்கள்? இந்த இடத்தை மீண்டும் ஏரியாக ஆக்கப்போகிறார்களா? மக்கள் இந்த இடத்தை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று மக்களின் வீடுகள் அகற்றப்படுகின்றனர். பல கல்லூரிகள், நீதிமன்றங்கள் நீர் நிலைகளுக்குள்தான் உள்ளன. வள்ளுவர் கோட்டம், ஏரிக்குள்தான் உள்ளது. அது அகற்றப்படுமா?

சீமான்

அம்பத்தூரில் இருக்கும் மக்களைத் திடீரென செம்மஞ்சேரி, கண்ணகி நகருக்கு மாற்றினால், அவர்களது வாழ்வாதாரம் என்ன ஆவது. அவர்களுக்கு உரிய இடம் வழங்காமல்,  வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மக்களை விரட்டிவிட்டு, சில ஆண்டுகளில் வேறு யாருக்கேனும் இந்த இடத்தை வழங்குவார்கள். இன்னும் 10 ஆண்டுகளில், தமிழர்கள் நிலமற்ற கூலிகளாக, நாடற்ற அகதிகளாக விரட்டப்படுவார்கள். அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், தற்போதிருக்கும் அதிகாரத்தைத் தகர்த்து எறிய வேண்டும்' என்று கொதித்தார்.

இதுகுறித்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள், 'திடீரென வீடுகளை இடித்தால், நாங்கள் என்ன செய்வோம். பல லட்ச ரூபாய் செலவு செய்து வீடுகளைக் கட்டியுள்ளோம். இந்த இடத்துக்கு சாலை போட்டது, தண்ணீர் இணைப்பு, மின்சாரம் இணைப்பு கொடுத்தது அரசுதானே. தற்போது வீடுகளை இடித்தால், நாங்கள் என்ன செய்வது. வீடுகளை இடிப்பதுகுறித்து உரிய முன்னெச்சரிக்கைகூட வழங்கப்படவில்லை. நாங்கள், ஏரிக்குள் வீடு கட்டியிருக்கிறோம் என்று கூறி இடிக்கிறார்கள். ஆனால், ஏரியை ஒட்டியே புதிய அப்பார்ட்மென்ட் கட்டுகிறார்கள். அது மட்டும் ஏரிக்குள் வராதா? இந்த இடத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு வழங்குவதற்ந்த்தான் தற்போது வீடுகளை அப்புறப்படுத்துகிறார்கள்' என்று அழுது தீர்த்தனர். 

வீடுகளை இடிப்பதற்கு 500-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கதறி அழுது தீர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஏரிப் பகுதியில் அகற்றப்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளுக்கு, பெரும்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வழங்கப்படும் என்று அந்தப் பகுதி வட்டாசியர் தெரிவித்துள்ளார்.