வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (13/10/2018)

கடைசி தொடர்பு:21:30 (13/10/2018)

`நான் செஞ்சது சின்ன உதவிதான்!’ - சிறுவயதில் பயின்ற அரசுப் பள்ளியை மறக்காத 2.0 நடிகர் நெகிழ்ச்சி

தான் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் உணவருந்த இட வசதியையும், தட்டு, டம்ளர்களையும் வழங்கி அசத்தி இருக்கிறார் 2.0, சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர்.  தங்கள் உயர்வுக்கு ஏணியாக இருந்தவர்களை கண்டுக் கொள்ளாதவர்கள் அதிகம் நிறைந்த காலம் இது. இந்தச் சூழலில், தான் 2 மற்றும் 3-ம் வகுப்பு படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மதியம் உணவருந்த ஏதுவாக தரைத்தளம், இரும்பு ஷெட், சைடு கட்டை அமைத்து கொடுத்திருக்கிறார் அந்த பள்ளியின் முன்னாள் மாணவரான ரமணி ராமச்சந்திரன்.

அதோடு, அந்த பள்ளியில் படிக்கும் 160 மாணவர்களுக்கும் நல்ல தரமான தட்டுகள் மற்றும் தண்ணீர் அருந்த வசதியாக டம்ளர்களையும் வாங்கிக் கொடுத்து அசத்தி இருக்கிறார் அவர். கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கும் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குதான் இப்படி ரூ.70,000 மதிப்பிலான உதவிகளைச் செய்திருக்கிறார் ரமணி ராமச்சந்திரன். இவர் சி.எல் குளோபல் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் சென்னையில் சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். அதோடு, இப்போது திரையங்குகளில் ஓடிகொண்டிருக்கும் `நோட்டா' படத்தில் நடித்திருக்கிறார். திரைக்கு வர இருக்கும் சர்க்கார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.


ரமணி ராமச்சந்திரனிடமே பேசினோம். ரமணி ராமச்சந்திரன்"எனக்கு சொந்த ஊர் இதே பொய்யாமணிதான். மிகவும் பின்தங்கிய ஊர் இது. நான் இந்த பள்ளியில் ஐம்பது வருடங்களுக்கு முன்பு 2 மற்றும் 3 ம் வகுப்புகளில் படிச்சேன். அதன்பிறகு, திருச்சி போய் படிச்சேன். பி.எஸ்சி அக்ரி முடிச்சுட்டு, அமெரிக்காவில் பத்து வருடங்கள் இருந்தேன். சென்னையில் கடந்த 22 வருடங்களாக சாஃப்ட்வேர் கம்பெனி நடத்திட்டு வர்றேன். அதோடு, சினிமா மீது உள்ள ஈடுபாட்டால் முத்தின கத்தரிக்கா, நோட்டா, சர்க்கார், 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளேன். ஃபோத’ங்கிற படத்தின் தயாரிப்பாளர் நான்தான்.

நான் படிச்சப்ப இந்த பள்ளியில் கட்டடம்கூட இருக்காது. எந்த அடிப்படை வசதியும் இருக்காது. 'எங்க பள்ளி மாணவர்கள் உணவருந்த ஏதுவாக இந்த வசதிகளை பண்ணி தாங்க'ன்னு பட்டதாரி ஆசிரியர் பூபதி கேட்டப்ப, 'செய்றேன்'ன்னு ஒத்துக்கிட்டேன். பள்ளி பழையபடி எந்த வசதிகளும் இல்லாமல்தான் இருக்கும் நினைச்சு வந்தேன். ஆனா,ஏ.சி வகுப்பறை, கணினி அறை, தொடுதிரை வகுப்பறை, இயற்கை விவசாயம், பள்ளி முழுக்க வைஃபை வசதி, பள்ளிக் கட்டட சுவர்கள், காம்பவுண்ட் சுவர்களில் கலர்கலரான ஓவியங்கள், தரமான குடிநீர், நல்ல மதிய உணவு, பெண் பிள்ளைகளுக்கு உதவும் வகையில் நாப்கின் எரியூட்டி இயந்திரம்ன்னு ஒரு நம்பர் ஒன் தனியார் பள்ளியில் இருக்கும் வசதிகளைவிட அதிக வசதிகளை செய்து வைத்திருந்தனர். எனக்கே ஆச்சர்யமா போயிட்டு. பூபதிதான் இவ்வளவு வசதிகளையும் ஸ்பான்ஸர் புடிச்சு செஞ்சுருக்கறதா சொன்னாங்க. இப்போதைக்கு சின்னதா, நான் படித்த பள்ளிக்கு செஞ்சுருக்கேன். இன்னும் நிறைய செய்ய இருக்கிறேன். ஒவ்வொரு அரசுப்பள்ளியும் இப்படி மாறிட்டா, கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு உலக அளவில் புகழ் பெறும்" என்றார் உணர்ச்சி மேலிட.