வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:21:00 (13/10/2018)

பட்டப்பகலில் மனைவியுடன் சென்ற புதுமாப்பிள்ளைக்குக் கொள்ளையர்களால் நேர்ந்த துயரம்!

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள கடற்கரைக்கு மனைவியை அழைத்து வந்த புதுமாப்பிள்ளையான இன்ஜனீயரை தாக்கி நகை, செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை சம்பவம் நடந்த கடற்கரை

சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்தவர் கதிரவன். இன்ஜினீயர். இவருக்கும் அனிதாவுக்கும் 20 நாள்களுக்கு முன் திருமணம் நடந்தது. புதுமண தம்பதியான கதிரவனும் அனிதாவும் திருவான்மியூரில் உள்ள வால்மிகி நகர் கடற்கரைக்கு  இன்று முற்பகல் 11 மணியளவில்  வந்தனர். 

கடற்கரை பகுதியில் சென்ற புதுமண தம்பதியை பைக்கில் வந்த  இருவர்  வழிமறித்தனர். அனிதா அணிந்திருந்த தாலி மற்றும் செயின், தங்க நகைகளைக் கழற்றி கொடுக்கும்படி மர்ம நபர்கள் மிரட்டினர்.  அவர்களுடன்  கதிரவனும் அனிதாவும் போராடினர். அப்போது மர்ம நபர்கள் கதிரவனின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்தார் கதிரவன். ரத்த வெள்ளத்தில் கதிரவன் உயிருக்குப் போராடினார்.

பின்னர் அனிதாவிடமிருந்து  12 சவரன் தங்க செயின், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு மர்மநபர்கள் பைக்கில் தப்பிச்சென்றனர். அனிதாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்குத் திரண்டனர். சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவான்மியூர் போலீஸார், ஆம்புலன்ஸ் மூலம் கதிரவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குக் கதிரவனுக்கு தையல் போட்டு அவசர பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலிருந்த  சிசிடிவி காட்சிகளை திருவான்மியூர் போலீஸார் ஆராய்ந்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். சிசிடிவி கேமரா மூலம் மர்மநபர்களை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். இன்று பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலையில் பலத்த காயமடைந்த கதிரவன் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.