வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (13/10/2018)

கடைசி தொடர்பு:23:00 (13/10/2018)

கும்பகோணம் அருகே திடீரெனெ உள்வாங்கிய காவிரி ஆற்றுப்பாலம்! - போக்குவரத்து நிறுத்தம்

கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் உள்ள காவிரி ஆற்றின் பாலம் உள்வாங்கியதை அடுத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

பாலம்

கும்பகோணத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு கடந்த 2004 ம் ஆண்டு மகாமக திருவிழாவின் போது, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பு  புறவழிச்சாலையை அமைத்தார். தாராசுரத்தில் தொடங்கி செட்டிமண்டபம் வரை 8 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ. 24.9 கோடி செலவில் இந்த புறவழிச்சாலையும், அரசலாறு மற்றும் காவிரி ஆறுகளின் குறுக்கே பாலங்களும் கட்டப்பட்டது.

சேதம்

இதில் செட்டிமண்டபம்  காவிரி ஆற்றின் குறுக்கே  60 மீட்டர் நீளத்திலும் 5.6 மீட்டர் அகலத்திலும் பாலம் கட்டப்பட்டது. இந்த புறவழிச்சாலை அமைக்கப்பட்டதிலிருந்து கும்பகோணம் நகரின் வடக்கு பகுதிக்கும்  கிழக்கு, மேற்கு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் நகரின் உள்ளே வராமல் சென்று வந்ததால் ஓரளவு போக்குவரத்து நெரிசல் குறைந்தது. சமீப காலமாக இந்த பாலத்தின் வழியாகக் கனரக வாகனங்கள் செல்லும்போது அதிர்வுகள் ஏற்பட்டு வந்தது. 

இந்நிலையில் இன்று செட்டிமண்டபம் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம், சாலையும் இணையும் இடத்தில் சுமார் ஒரு மீட்டர் சுற்றளவுக்கு துளை போல் உள்வாங்கியது. அதிலிருந்த மண் கீழே சென்றதால் பெரும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.
இதையடுத்து உடனடியாக சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தகவல் அறிந்ததும் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்  அன்பழகன், உதவி ஆட்சியர் எம்.பிரதீப்குமார் மற்றும்  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆகியோர் வந்து பாலம் உள்வாங்கிய இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மூடப்பட்ட பாலம்

இதுகுறித்து உதவி ஆட்சியர் பிரதீப்குமார், ``பாலமும், சாலையும் இணையும் இடத்தில் மண் உள்வாங்கியுள்ளது. உடனடியாக போர்க்கால அடிப்படையில் கிராவல் மண்ணும், ஆயிரம் மூட்டை ஆற்று மணலும் நிரப்பப்பட்டு பணிகள் தொடங்கப்படும். இந்தப் பணிகள் நிறைவு பெற்றவுடன் இதில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் அதுவரை பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதியில்லை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க