வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:03:00 (14/10/2018)

ஈரோட்டில் எண்ணெய் மறுசுழற்சி குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!

தீ விபத்து

ஈரோட்டில் எண்ணெய் மறுசுழற்சி செய்யும் குடோன் ஒன்றில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து வெடித்து தீப்பற்றிய எண்ணெய் பேரல்களை, நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

தீ விபத்து

ஈரோட்டை அடுத்த கோணவாய்க்கால் மணக்காடு பகுதியில் எண்ணெய் மறுசுழற்சி செய்யும் குடோன் ஒன்று உள்ளது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட என்ஜின் ஆயில் மற்றும் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் போன்றவற்றை பேரல் கணக்காக வாங்கி வைத்து, அதனை மறுசுழற்சி செய்து எரிபொருளாக உற்பத்தி செய்கின்றனர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் இந்த நிறுவனத்தினை நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றிருக்கிறார். அதனையடுத்து, குடோனில் கிட்டத்தட்ட 500 பேரல்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை, மறுசுழற்சி செய்வதற்காக ஸ்டாக் வைத்திருக்கின்றனர். இந்த நிலையில், (அக் - 13) மதியம் திடீரென எண்ணெய் பேரல்கள் வெப்பத்தால் புகைய ஆரம்பித்திருக்கின்றன. எண்ணெய் பேரல்கள் புகைவதைப் பார்த்து, குடோனில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடிவந்திருக்கின்றனர். கொஞ்ச நேரத்திலேயே தீ மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்திருக்கிறது. தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள்ளாக கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட பேரல்கள் தீப்பிடித்து எரிந்திருக்கின்றன. நேரம் ஆக ஒவ்வொரு பேரலாக தீப்பிடித்து வெடிக்க, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் நடுங்கிப் போயிருக்கின்றனர். 

தீ விபத்து

இந்த தீ விபத்தால் உண்டான புகையை சுவாசித்த பலருக்கு மூச்சுத்திணறலும், கண் எரிச்சலும் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 5 தீயணைப்பு வண்டி மூலம், பல மணி நேரம் போராடித் தான் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். இந்த சம்பவத்தால் குடோனைச் சுற்றியுள்ள சில கிலோ மீட்டர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சலும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டிருக்கின்றது. இந்த பயங்கரமான தீ விபத்து எப்படி ஏற்பட்டது?... சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்றித் தான் இந்த நிறுவனம் இயங்கியதா?... என வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.