வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:08:00 (14/10/2018)

`தமிழர்களின் பெருமை வெளியில் வரக்கூடாது என நினைப்பவர்களை அரசு அனுமதிக்காது!'' - மாஃபா பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல்துறை சார்பில் நடைபெற்று வரும் நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆய்வு செய்தார். 

கீழடி ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் மத்திய தொல்லியல்துறையின் மூன்று ஆண்டுகள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து, நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள மத்திய தொல்லியல்துறை தமிழக தொல்லியல்துறைக்கு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழக தொல்லியல்துறை சார்பில், நான்காம் ஆண்டு அகழ்வாராய்ச்சி பணிகள், கடந்த ஏப்ரல் 18ல் துவங்கியது. தமிழக தொல்லியல்துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் 5 தொல்லியலாளர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டனர். இதில் 34 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தது. இப்பணிகள் செப்டம்பர்-30ம் தேதியோடு முடிவடைந்தது. இதில் 6 தங்க ஆபரணங்கள் உள்பட சுமார் 5820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன்  ஆய்வுப்பணிகள் மேற்கொண்டார். அங்குள்ள அகழ்வாய்வுக்குழிகளை பார்வையிட்டார். பின்னர் புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார். அவருடன் தமிழக தொல்லியல்துறை ஆணையர் உதயசந்திரன், துணை இயக்குநர் சிவானந்தம் ஆகியோர் உடனிருந்தனர்.

அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசும் போது, "கீழடியில்  தமிழக தொல்லியல்துறையின்  நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியில் 5820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் சிறு அளவிலான ஆறு தங்க பொருட்கள் கிடைத்துள்ளன. 1கிராம் அளவிலான காதணி, பாசிமணி, நட்சத்திர வடிவிலான பொத்தான் போன்ற தங்க பொருட்கள் கிடைத்துள்ளன. மேலும், ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சிக்கு, மத்திய தொல்லியல்துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளோம். கீழடியில்  ரூ. 1 கோடி மதிப்பில் 2 ஏக்கர் பரப்பளவில் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இது தமிழகத்தின்  16-வது அருங்காட்சியகமாக அமையவுள்ளது. தமிழர்களின் பெருமைகள் வெளிச்சத்திற்கு வரக்கூடாது என யாரும் முயற்சிக்கவில்லை. அப்படியே முயற்சிகள் எடுத்தாலும் அதனைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க