வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (14/10/2018)

கடைசி தொடர்பு:07:30 (14/10/2018)

குமரியில் ஹைபிரிட் பனைமரங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர் கோரிக்கை!

15 அடி வரை மட்டுமே வளரும் வகையிலும், சில ஆண்டுகளில் பலன்தரும் விதமாகவும் ஹைபிரிட் பனைமரங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மகாசபா அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராவின்சன், அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக ஆர்வலர்கள்

குமரி மகாசபா தலைவர் வழக்கறிஞர் ராவின்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "குமரி மகாசபா எடுத்த முயற்சியால் கன்னியாகுமரி மாவட்டத்தின் இரண்டு எம்.பி.க்களும் விமானநிலையம் வேண்டும் என்கின்றனர். அதில் விஜயகுமார் எம்.பி. சாமிதோப்பில் விமானதளம் வேண்டும் என்கிறார். இந்த ஆண்டு இறுதிக்குள் அடிக்கல் நாட்டுவதாகவும் விஜயகுமார் எம்.பி. எங்களிடம் கூறியுள்ளார். விமான தளம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட பகுதியில் ஆறு வருகிறது என்பதுபோன்ற சில தொழில்நுட்ப சந்தேகங்கள் எழுந்தது. குமரிமகாசபா உறுப்பினர் பொறியாளர் அன்பு சாமுவேல் அந்த சந்தேகங்களை தீர்த்து வைத்தார். இருவரும் டெல்லிபோய் விமானத்துறை அமைச்சரை சந்தித்து, இதுபற்றி பேச உள்ளார்கள். நாகர்கோவிலுக்குவரும் ரயில்கள் திருவனந்தபுரம் செல்ல இன்ஜின் மாற்றும் நிலை உள்ளது. இதனால் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க இரண்டு பெட் லைன்கள் அமைக்க உள்ளதாக 24.9.18-ல் தெற்கு ரயில்வே எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பனை மர ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். பனை விதையாக அல்லாமல் நாற்றுகளாக உற்பத்தி செய்து பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். பனைமரம் வளர்ந்து பலன்தர அதிகப்படியான ஆண்டுகள் தேவைப்படும், அதிக உயரம் வளர்வதால் பனை உணவுகளை சேகரிக்க சிரமமாக இருப்பதாலும் பனை மரத்தை நடுவதற்கு மக்கள் தயங்குகிறார்கள். எனவே 15 அடி வரை மட்டுமே வளரும் வகையிலும், சில ஆண்டுகளில் பலன்தரும் விதமாகவும் ஹைபிரிட் பனைமரங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குமரி மாவட்டத்தில் நிறைவேற்றவேண்டிய கோரிக்கைகளை வலியுதுத்தி வரும் 23, 24, 25 தேதிகளில் டெல்லி சென்று நெடுஞ்சாலைத்துறை, விமானத்துறை, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட அமைச்சகத்தை தொடர்புகொண்டு மனு அளிக்க உள்ளோம்" என்றார்.

​​​