வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (14/10/2018)

கடைசி தொடர்பு:06:00 (14/10/2018)

மீடூ பாலியல் புகார்களை விசாரிக்கக் குழு - விஷால் அறிவிப்பு!

மீடூ குறித்த புகார்களை விசாரிக்க மூன்று பேர் அடங்கிய குழு அமைக்கப்படும் எனத் தயாரிப்பாளர் சங்கத்தலைவரும், நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால்

உலகெங்கும் பரபரப்பைக் கிளப்பிவரும் #MeToo விவகாரம் தமிழகத்தையும் உலுக்கியெடுக்க ஆரம்பித்திருக்கிறது. பாலியல் சீண்டல்களால் பாதிப்புக்கு உள்ளாவோர் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை இந்த 'மீடூ' வழியாக உலகுக்குத் தெரியப்படுத்திவருகிறார்கள். இந்தித் திரையுலக நட்சத்திரங்கள் பலர் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகளை இந்த மீடூ வழியாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, 'திரையுலகில் பாலியல் ரீதியாகப் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களுக்கு என்ன தீர்வு காணப் போகிறீர்கள்?' என்றக் கேள்வியைப் பலரும் முன்வைத்தனர். இந்நிலையில் இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது கூறியிருக்கும் பாலியல் புகார் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்படும். தமிழ்த் திரையுலகில், #MeToo விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்கென்றே 3 பேரைக் கொண்ட குழு ஒன்றும் இதற்காக அமைக்கப்படவுள்ளது'' என்றார்.