வெளியிடப்பட்ட நேரம்: 10:07 (14/10/2018)

கடைசி தொடர்பு:10:07 (14/10/2018)

சென்னை பாரிஸ் பூக்கடைகள் கோயம்பேடுக்கு மாற்றம்..?! தீர்ப்பு யாருக்குச் சாதகம்?

சென்னை பாரிஸ் பூக்கடைகள் கோயம்பேடுக்கு மாற்றம்..?! தீர்ப்பு யாருக்குச் சாதகம்?

சென்னை பாரீஸ், மக்களின் அன்றாட தேவை உள்பட ஆண்டாண்டு தேவைக்குமான அனைத்து பொருள்களும் கிடைக்கும் இடம். இவற்றில் பூ மற்றும் பழ வியாபாரிகளும் அடக்கம். பாரிஸில் உள்ள பத்ரியன் தெருவில் உள்ள பூ மற்றும் பழ வியாபாரிகள் மீது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமும் மற்றும் சென்னை கோயம்பேடு வணிக வளாகச் சங்கமும் இணைந்து பத்து நாள்களுக்கு முன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. கடந்த சில தினங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில், நேற்று (12-10-18) தீர்ப்பு வெளியானது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது, இந்த வழக்கின் அடிப்படைப் பிரச்னை என்ன என்பதுகுறித்து, சென்னை பூக்கடை சில்லறை பூஷ்ப வணிகர்கள் சங்கத் தலைவர் தனராஜ் என்பவரிடம் கேட்டோம்...

பூக்கடை

``1932-ம் ஆண்டு முதலே சென்னையின் மிக முக்கிய வணிகஸ்தலமாக விளங்குகிறது, சென்னை பூக்கடை என்று சொல்லக்கூடிய சென்னை பாரிமுனை. பூ, காய்கறி, பழ வகைகள், ஜவுளி, பாத்திரம் என எண்ணற்றப் பொருள்களின் ஒட்டுமொத்த விற்பனைக்களமாக பாரிமுனை இருந்துவருகிறது. 1996-ம் ஆண்டு அப்போதைய அரசு, இங்கு உள்ள அனைத்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகளும் சென்னை கோயம்பேடு வணிக வளாகத்துக்கு மாற்றப்பட்டனர். அங்கு உள்ள வணிக வளாகத்தில் 150 சதுர அடி முதல் 350 சதுர அடி வரை முதல் தளத்திலும் கீழ் தளத்திலும் சேர்த்து மொத்தம் 450 கடைகள் அரசால் கட்டப்பட்டன. அரசு நிர்ணயித்த வாடகை அல்லது விற்பனைத் தொகையைத் தாண்டி, அங்கு உள்ள பெரும் பண முத(லாளி)லைகளால் வணிக வளாகம் அக்கிரமிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 60,000 ரூபாய் முதல் 1 லட்சத்துக்கும் அதிகமாக மாத வாடகை வசூலிக்கப்படுகிறது. வசதி படைத்தவர்களிடம் சில வருடத்துக்கான வாடகைப் பணத்தை மொத்தமாக வசூலிக்கும்விதத்தில் 3 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை வாங்கப்படுகிறது.

வாழ்வாதாரத்தைத் தேடிக்கொண்டிருக்கும் வணிகர்களான அங்கு செல்ல இயலாதவர்கள், சென்னை பூக்கடையிலேயே இருந்து, கோயம்பேட்டிலிருந்து மொத்தமாக பூ மற்றும் காய்கனிகளை வாங்கிவந்து இங்கு விற்பனை செய்துவருகிறார்கள். இந்நிலையில்தான் சென்னை கோயம்பாடு வணிக வளாகத்தில் உள்ள பெருவணிகர்கள், `பாரீஸ் வியாபாரிகள் எவரும் அங்கு வியாபாரம் செய்யக் கூடாது. அவர்களும் சென்னை கோயம்பேட்டில்தான் வியாபாரம் செய்ய வேண்டும். அவர்களுக்கான கடைகள் இங்கு உள்ளன. அவரவருக்கு எவ்வளவு சதுர அடியில் கடைகள் வேண்டுமோ அவற்றை எங்களிடமிருந்து வாங்கிக்கொள்ளலாம். சென்னை பாரிஸிலும் கோயம்பேட்டிலும் பிரிந்து வணிகர்கள் இருப்பதால் போக்குவரத்துச் செலவு உள்பட அனைத்து செலவுகளும் இரட்டிப்பாகின்றன. இதனால் கொள்முதலில் அதிக முதலீடு செய்யவேண்டியுள்ளது. இதைத் தடுக்கும்விதத்திலும் தவிர்க்கும் நோக்கிலும் சென்னை பூக்கடையில் உள்ள மொத்தம் மற்றும் சில்லறை  புஷ்ப வியாபாரிகள் அனைவரும் கோயம்பேட்டிலேயே வணிகம் செய்ய வேண்டும்' என வழக்கு தொடுத்தனர்.  இதனால், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், பூக்கடை பத்ரியன் தெருவில் உள்ள சுமார் 129-க்கும் மேலான கடைகளுக்கும் சீல்வைத்தது.

பூக்கடை

இந்த வழக்கு நேற்று (12-10-18) அன்று விசாரணைக்கு வந்தது. அதில் `சென்னை பாரிஸில் இருக்கக்கூடிய பூ வியாபாரிகளில் மொத்த வியாபாரிகள் அனைவரும் சென்னை கோயம்பேட்டில்தான் வியாபாரம் செய்ய வேண்டும். சில்லறை வணிகர்கள் மட்டுமே சென்னை பூக்கடையில் வியாபாரம் செய்யலாம்' எனத் தீர்ப்பானது. இந்தத் தீர்ப்பால், பத்ரியன் தெரு சில்லறை வணிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

இந்த வழக்கு தொடுத்ததற்கான அடிப்படைக் காரணம், கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள பெரும் பண முத(லாளி)லைகள்தான். அதாவது, கோயம்பேட்டில் உள்ள முதல் தள கடைகள் அனைத்தும் தற்போது கேட்பாரின்றி, காலியாகவே உள்ளன. கீழ் தளத்தில் மட்டுமே சிலர் வியாபாரம் செய்துவருகின்றன்ர். அந்தக் கடைகளின் வாடகையைக்கூட மூன்று வருடம் ஐந்து வருடம் எனப் பேசி மொத்தத் தொகையையும் வாங்கிக்கொள்கின்றனர். பாரீஸில் உள்ள மக்களும் கோயம்பேடுக்கு வந்துவிட்டால், முதல் தளத்தில் உள்ள கடைகளையும் வாடகை அல்லது விற்பனை செய்து, பணத்தில் குளித்துக் களிக்கலாம் என்பதுதான் அவர்களின் எண்ணம். அதற்காகவே, இந்த வழக்கு எங்கள் மீது போடப்பட்டது. இருப்பினும், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி சுப்ரமணியன் அவர்களின் தீர்ப்புக்கு இணங்க, தற்போது பாரீஸில் சில்லறை வணிகர்கள் மட்டுமே வியாபாரம் செய்வது என முடிவெடுத்துள்ளோம்'' என்று சென்னை பூக்கடை பத்ரியன் தெரு புஷ்ப வணிகர்களின் குரலாகப் பேசினார் தனராஜ்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க