வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (14/10/2018)

கடைசி தொடர்பு:10:58 (14/10/2018)

"நான் பேசக்கூடாது என கவர்ன்மென்ட் ஆர்டரே இருக்கு" - கல்லூரி விழாவில் அதிர்ச்சியளித்த கமல்!

டிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், மூன்று நாள் சுற்றுப்பயணமாக சேலம், நாமக்கல் மாவட்டத்திற்கு வந்திருக்கிறார். 12ம் தேதி காலை முதல் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் கமல். தொடக்கத்திலேயே நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம் கல்லூரியில் நடைபெற்ற சிவாஜி 90வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கு சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார், இயக்குநர் அமீர், பாடலாசிரியர் சினேகன், கல்லூரியின் தாளாளர் மதிவாணன், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். 

விழாவில் பேசிய இயக்குநர் அமீர், '' கமல் தற்போது நடிகர் அல்ல, அவர் மக்கள் பிரதிநிதி. எம்.ஜி.ஆருக்குப் பிறகு தன் சினிமாவில் அரசியல் சொன்ன ஒரே தலைவர் கமல். அவருடைய ஒரு படப் பிரச்னையில் இந்த நாட்டை விட்டே போவதாக சொன்னார். நம் குடும்பத்தில் கோபம் வந்தால் நான் சொல்வதில்லையா. அதற்காக நம் குடும்பத்திற்குள் வேறு ஒருவன் புகுந்தால் விட்டு விடுவோமா? அப்படி தான் கமல் சாரும். சீமான், சகாயம், கமல் எல்லோருடைய அரசியல் கூட்டத்திலும் நான் பேசுவதாகக் கூறுகிறார்கள். இவர்கள் எல்லோரும் தமிழ் பிள்ளைகள். இதில் யார் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சி அடைவேன். கமல் சாரிடம் பேசும்போது, 'நான் முதல்வர் ஆகி என் குடும்பத்தை முன்னேற்ற விரும்பவில்லை. மக்களை முன்னேற்ற விரும்புகிறேன்' என்றார். இவர் ஆரிய சிந்தனையில் உருவாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர் ஆரிய சிந்தனையை வேரறுக்க வந்த காவியன்.'' என முடித்தார் அமீர்.

கமல்

கமல்கமல்ஹாசன் பேசியபோது, ''நான் இன்று அரசியல்வாதியாக வந்திருக்கிறேன். இந்த அவைக்கு நான் அடங்குவேன். அந்த அவைக்கு நான் அடங்கமாட்டேன். அந்த அவை தரம் குறைந்த அவையாக இருக்கிறது. நீங்களும், நானும் ஒரே கோபம் கொண்டவர்கள். நாளைய வானத்தைத் தொட கூடியிருக்கிறோம்.  நாளைய தலைவர்களைத் தேடி இங்கு வந்திருக்கிறேன். 'கவர்ன்மென்ட் ஆர்டர்' ஒன்று இருக்கிறது. அதில், சிலர் பள்ளிகளில் பேச அனுமதி கிடையாது. அந்த பட்டியலில் என்னுடைய பெயரும் சேர்த்திருக்கிறார்கள். பள்ளியில் யாரும் தங்குவது இல்லை. வெளியில் உங்களுக்காகக் காத்திருக்கிறேன். மாணவர்களைத் தவிர நேர்மையான அரசியல் பேச யாருக்கு துணிவு இருக்கு. மாணவர்களாக இருக்கும் போது அரசியல் பேசியவர்கள்தான் இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் போராடித்தான் விடுதலை கிடைத்தது. மாணவர்கள் அரசியல் பேசக் கூடாது என்றால் சமூக அறிவியல் எப்படி போதிக்க முடியும். மாணவர்கள் வெளியே வந்து அரசியலை தெரிந்துகொள்ள வேண்டும். நான் மக்கள் நீதி மய்யத்திற்கு ஓட்டு கேட்கவில்லை. என் வாழ்வின் விளிம்பில் இருக்கிறேன். உங்களின் எதிர்காலத்திற்காக வந்திருக்கிறேன். ஆண், பெண் பாகுபாடு காட்டாமல் ஓட்டுச் சாவடிகளை காக்க வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் வீச்சறுவாள் இருக்கக் கூடாது. கல்வி அரணாக இருக்க வேண்டும். உங்கள் கூட்டம் அங்கு பெருகினால் ரவுடிகள் ஓடி விடுவார்கள். ஓட்டுக்கு பணம் வாங்குபவர்களின் கையை தட்டி விட உங்களுக்குக் கடமை இருக்கு. நடிகர் கமல்ஹாசன் உங்களுக்குக் தெரியும். அரசியல்வாதி கமல்ஹாசன் என்பது நாளைக்குப் புரியும்'' என்றார்.

அதையடுத்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார்...

மாணவி திவ்யகீர்த்தனா: "சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி தவறாக வரும் கருத்துகளை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?"

"அழுக்கு கால்களுடன் இருந்து கொண்டு தவறான கருத்துகள் கூறுகிறார்கள். என் மனதை நான் சுத்தமாக வைத்திருப்பதால் எனக்கு எந்த அச்சமும் இல்லை. நான் அரசியலுக்கு வந்ததுமே காந்தியின் வழியைப் பின்பற்றி அவரைப் போல வாழ கற்றுக் கொண்டு வருகிறேன். என் மனதை சுத்தமாக வைத்திருப்பது எனக்குப் பிடிக்கும்."

மாணவன் சங்கமேஸ்வரன்: "உங்களின் தமிழ் ஆளுமையை யாரிடமிருந்து பெற்றீர்கள்?"

"சிவாஜியிடம் இருந்து கற்றுக் கொண்டேன். கண்ணதாசனும், கருணாநிதியும் வானொலியில் புரியும் வண்ணம் பாடம் நடத்தினார்கள். நானும் பெரிய பக்திமானாக இருந்தவன். சூழ்நிலை என்னை மாற்றியது. பகுத்தறிவு இப்படி இருக்க வேண்டும் என்பதல்ல. அதை வளர்ப்பதற்கு பல அமைப்புகள், அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. அவர்கள் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தில் பல மதத்தினரும் இருக்கிறார்கள். என் பகுத்தறிவு அவர்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது."


மாணவன் கார்த்திக்: "வருங்கால பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்து இருக்குமா? தொழில் சார்ந்து இருக்குமா?"

"விவசாயம் 7000 ஆண்டுகள் கடந்த பழைய தொழில். புதிய தொழில்கள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதற்காக விவசாயம் இருக்காது என்று சொல்லவில்லை. நாம் சோறு தின்னும் வரை விவசாயம் இருக்கும். நட், போல்ட் போன்றவற்றை என்று சாப்பிட தொடங்குகிறோமோ அப்போது தொழிலாக மாறும். அதனால்தான் மக்கள் நீதி மய்யத்தில் 'கிராமியமே தேசியம்' என்ற அமைப்பை உருவாக்கி இருக்கிறோம்."

இயக்குநர் அமீர்: "நீங்கள் காந்தியாக வாழ்ந்து வருவதாகச் சொன்னீர்கள் அரசியலில் காந்தியாக இருந்தால் சுட்டுக்கொன்று விடுவார்களே?"

"நான் ஆரம்பத்தில் காந்தி பற்றி தவறாக சொன்னேன். பிறகு அவரைப் போல வாழ ஆரம்பித்து இருக்கிறேன். காந்தியை மகாத்மா என்று சொல்லி நாம் எமக்கு எட்டாத மனிதராக உருவாக்கி இருக்கிறோம். காந்தியை மனிதராகப் பாருங்கள். என்னால் முடியும் என்றால் உன்னாலும் முடியும். காந்தி ஒரு தேவதை அல்ல. அவர் குஜராத்திக்காரர் கூட இல்ல. அவர் ஒரு மனிதர். எல்லோருக்கும் மயானம்தான் எல்லை."

நாமக்கல்

கமல்ஹாசனின் வருகையை ஒட்டி மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் அருகே தாரை தப்பட்டையோடு மக்கள் நீதி மய்யத்தினரும், பொதுமக்களும் காத்திருந்தார்கள். அங்குவந்த கமல்ஹாசன், ''உங்களிடம் பேசுவதற்காக இங்கு மேடை அமைக்கப்பட்டது. அனுமதி மறுக்கப்பட்டதால் மேடை கலைக்கப்பட்டது. நடுத்தெருவில் இருந்து உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு தடை வந்தாலும் அடங்க மறுக்கும் காளை நான்.

இந்த சுற்றுவட்டாரத்தில் 60 கிராமங்கள் இருக்கின்றன. ஆனால், பேருந்து நிலையம் இருக்கிறதா? நீங்கள் கேட்காததை நாங்கள் கேட்போம். இங்கிருக்கும் மேம்பாலத்தில் விளக்கு இல்லை. இதையெல்லாம் தெரிந்துதான் இங்கு வந்திருக்கிறேன். மீண்டும் மீண்டும் உங்களைச் சந்திப்பேன். எங்களுக்கு அனுமதி மறுக்க மறுக்க கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வணக்கம் என்று முடிக்க மாட்டேன். கடமை காத்திருக்கிறது." என்றார். 

அடுத்து மல்லசமுத்திரம் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்துப் பேசினார். இளம்பிள்ளை பஸ் நிலையத்தில் கமல் வருகைக்காக தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. தாரை தப்பட்டைகள் முழங்கப்பட்டன. அங்கு வந்த கமல், ''ஜி.எஸ்.டி., உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் பாதிப்பு உண்டு. என் கையை வலுப்படுத்துங்கள் நல்ல எதிர்காலத்தை உருவாக்கலாம்'' என்று கூறி விடைபெற்றுச் சென்றார்.


டிரெண்டிங் @ விகடன்