வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (14/10/2018)

கடைசி தொடர்பு:15:08 (14/10/2018)

`நல்லவரா.. கெட்டவரா..? இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம்' - வீடியோ வெளியிட்ட வைரமுத்து

என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் அடிப்படை ஆதாரமற்றவை. இதை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என வைரமுத்து தெரிவித்துள்ளார். 

வைரமுத்து

#MeToo மூலமாகக் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார் பிரபல பாடகி சின்மயி. இந்தப் புகார்தான் தமிழகத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. இந்த விவகாரத்தில் பலர் சின்மயிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதில் சின்மயியும், வைரமுத்துவும் தங்கள் பக்கம் உள்ள நியாங்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். 

அதன் வரிசையில் தற்போது வைரமுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என்மீது வழக்கு தொடரலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒருவாரமாக ஆலோசித்து வந்தேன். அசைக்கமுடியாத ஆதாரங்களைத் தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் என் மீது வழக்கு தொடரலாம். நான் நல்லவரா.. கெட்டவரா.. என்பதை யாரும் இப்போது முடிவு செய்ய வேண்டாம். அதை நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்குத் தலை வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.