ஒட்டுமொத்த தேசமும் அபாயகரமான சூழலில் சிக்கியுள்ளது - மாணிக் சர்க்கார் வேதனை! | Former tripura cm manik sarkar attends a public meet at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 01:17 (15/10/2018)

கடைசி தொடர்பு:08:36 (15/10/2018)

ஒட்டுமொத்த தேசமும் அபாயகரமான சூழலில் சிக்கியுள்ளது - மாணிக் சர்க்கார் வேதனை!

``வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவையும் அதன் கூட்டாளிகளையும் தோற்கடித்து இந்தியாவை மீட்டெடுக்க அனைவரும் தயாராக வேண்டும்'' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும்,  திரிபுரா மாநில முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்கார் பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகக் குழு சார்பில் சுர்ஜித் பவன் கட்டட நிதியளிப்பு விழா மற்றும் நவம்பர் புரட்சியின் 101- வது ஆண்டுவிழா பொதுக்கூட்டம் திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ``மத்திய பா.ஜ.க அரசு தேர்தலில் ஜெயிப்பதற்கு முன் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மத்தியில் பா.ஜ.க ஆட்சி அமைந்த கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும், கடந்த காலத்தைவிட 40 சதவிகித விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வருடத்துக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்போம் என்றார்கள். ஆனால், இந்த அரசின் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி போன்ற தவறான பொருளாதாரக் கொள்கைகளால் தற்போது நாட்டில் பல லட்சம் பேர் வேலையிழந்துபோயிருக்கும் நிலைமைதான் ஏற்பட்டிருக்கிறது. தற்போது நாட்டில் 22 கோடி பேர் வரை வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். 

ஆனால், ஆளும் மத்திய பா.ஜ.க அரசோ, நாட்டின் அடிப்படை பிரச்னைகளை மறைப்பதற்காகவே இங்குச் சாதி - மத மோதல்களை உண்டாக்கி, மக்களைப் பிளவுபடுத்தும் வேலையைச் செய்துவருகிறது. அத்துடன் மாநில அரசுகளின் உரிமைகளை முற்றிலுமாக பறிப்பதிலும், மாநில அரசாங்கத்தில் தங்களது மறைமுக ஆட்சியைச் செலுத்துவதிலும் மிக மும்முரமாக இருக்கிறது. தற்போதைய பா.ஜ.க அரசின் ஆட்சியால் ஒட்டுமொத்த தேசமும் அபாயகரமான சூழலில் சிக்கித் தவிக்கிறது. எனவே, வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் மத்திய பா.ஜ.க அரசையும், அதன் கூட்டாளிகளையும் தோற்கடித்தால்தான் நாட்டை மீட்டெடுக்க முடியும். எனவே அனைவரும் அதற்குத் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.