`அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வரலாம்; முற்றிலும் மாற்றக் கூடாது' - நீதிபதி கே.சந்துரு | Former justice chandru speaks about indian constitution

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (15/10/2018)

கடைசி தொடர்பு:18:15 (15/10/2018)

`அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் வரலாம்; முற்றிலும் மாற்றக் கூடாது' - நீதிபதி கே.சந்துரு

கருப்பையா

காந்திய தொண்டர் மன்றம் சார்பில்,`அரசியல் சட்டத்துக்கு அறுவைசிகிச்சை தேவையா?' என்கிற தலைப்பில் காரைக்குடியில் கருத்தரங்கம் நடைபெற்றது. பழ.கருப்பையா, வழக்கறிஞர் பழ.இராமசாமி, நீதிபதி கே.சந்துரு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

பழ.கருப்பையா பேசியபோது,``மேடை விவாதங்கள் தரங்கெட்டுப் போய்விட்டன. முன்பெல்லாம் மேடையில் பேசுகிற அரசியல் தலைவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தனர். மக்கள் கேட்கிற நிலையில் இருந்தனர். இன்றெல்லாம் மக்கள் அரசியல்வாதிகளைவிட மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள். ஆள்பவர்களைக் கார்ப்பரேட் முதலாளிகள் உருவாக்குகிறார்கள். முதலாளிகளை ஆள்பவர்கள்
வளர்த்தெடுக்கிறார்கள். அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் மாற்றப்படக் கூடாது. அமெரிக்காவில் உள்ளது போல மாநிலங்களின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டு எஞ்சிய ராணுவம், வெளிவிவகாரத்துறை போன்றவை மத்திய அரசிடம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஒரு மாநில முதல்வர் பிரதமரைச் சந்திக்கும் நிலை மாறி, பிரதமர் முதல்வர்களைச் சந்திக்க காத்திருக்க வேண்டிவரும்" என்றார்.

நீதிபதி சந்துரு

நீதியரசர் கே.சந்துரு பேசியபோது, "வாகனத்தில் ஏற்படும் பழுதுக்காக மொத்த வாகனத்தையும் தூக்கியெறிவதுபோல் அல்ல அரசியலமைப்பு. காந்திய வழியிலான இந்த அரசியலமைப்பு உட்புற வலிமை பெற்றது. எதிர்கால தொலைநோக்கோடு வடிவமைக்கப்பட்டது அது. ஒரு நீதிபதி சொன்ன தீர்ப்பை பிற்காலத்தில் மற்றொரு நீதிபதி மாற்றித் தீர்ப்பு வழங்கலாம். ஆனால், அடிப்படையான அரசியலமைப்பு எப்போதுமே மக்கள் பக்கம் இருக்கும்.

எல்லோருக்கும் கட்டாய இலவசக் கல்வி, எல்லோருக்கும் வேலை இவையெல்லாம் அடிப்படையான உரிமைகள். இச்சட்டங்கள் இயற்றப்பட்டு கிட்டத்தட்ட 68 வருடங்கள் ஆகியும் இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டதா என்பது அடிப்படை பிரச்னைகள். இதையெல்லாம் விட்டுவிட்டு பிரிவு 377, குற்றவியலிலிருந்து சிவில் பிரிவுக்கு மாற்றிய தீர்ப்புகள் குறித்து விவாதிப்பதெல்லாம் நேர விரயம். வீட்டுப் பிரச்னை, சொத்து பிரச்னைகளில் நீதிமன்றம் தலையிடும்போது சமயப் பிரச்னைகளில் ஏன் தலையிடக் கூடாது?. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரலாமேயொழிய முற்றிலும் மாற்றுவது அடிப்படையையே சிதைப்பதுபோல் ஆகிவிடும்" என்றார்.