வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (15/10/2018)

கடைசி தொடர்பு:06:56 (16/10/2018)

`மன்னிப்புக் கேட்டுவிட்டார்’ - நடிகர் சண்முகராஜன் மீதான புகாரைத் திரும்பப் பெற்ற நடிகை ராணி!

பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகர் சண்முகராஜன் மீது செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகை ராணி, அதைத் திரும்பப் பெற்றுள்ளார்.

நடிகை ராணி

திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூர் பகுதியில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நந்தினி தொடரின் ஷூட்டிங் நடந்தது. இந்தத் தொடரில் ராணி நடித்து வருகிறார். இந்தத் தொடரில் ராணிக்கு கணவராக சண்முகராஜன் நடித்து வருகிறார்.  இந்தத் தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இருவருக்கும் கடந்த சில நாள்களாகப் பிரச்னை இருந்துவந்துள்ளது. செங்குன்றம் பகுதியில் உள்ள மணி டெக்டைல்ஸ் என்ற துணிக்கடையில் ஷூட்டிங் நடைபெற்றபோது, ராணியின் கணவருக்கும் நடிகர் சண்முகராஜனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராணியின் கணவரை சண்முகராஜன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அப்போது அதைத் தடுக்க வந்த ராணியையும் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் செங்குன்றம் காவல் நிலையத்தில், நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததுதான் இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம் என ராணி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாகப் போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில், ராணி திடீரென்று நடிகர் சண்முகராஜன் மீது கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றுவிட்டார். நடிகர் சண்முகராஜன் மன்னிப்புக் கேட்டதால், அவர் மீதான பாலியல் புகாரை அவர் திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.