Published:Updated:

`எஸ்.ஐ உட்பட 14 காவலர்களுக்குக் கொரோனா' - இழுத்து மூடப்பட்ட கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளி

காவலர்கள்
காவலர்கள் ( மாதிரி படம் )

கடலூர் காவலர் பள்ளியில் பயிற்சிக்கு வந்த பெண் காவலர்கள் உள்ளிட்ட 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அதிகரித்திருப்பதால் மார்ச் 24-ம் தேதி தொடங்கி மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் இதுவரை சுமார் 8,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 53 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா பாதிப்பில் தமிழக அளவில் 3-வது இடத்திலிருக்கும் கடலூரில், சுமார் 395 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில், கடலூர் காவலர் பயிற்சிப் பள்ளிக்குப் பயிற்சிக்கு வந்த பெண் காவலர்கள் உள்ளிட்ட 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 134 பெண் காவலர்கள், பயிற்சி எடுப்பதற்காக கடலூருக்கு வந்தார்கள். கடந்த 7-ம் தேதி ஆயுதப்பயிற்சி மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக காவலர் பயிற்சிப் பள்ளியில் அவர்களுக்குப் பயிற்சிகள் தொடங்கின.

பயிற்சி பெறும் பெண் காவலர்கள் அனைவரும் கையுறைகளுடன், முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது. பயிற்சியில் ஈடுபட்ட 134 பேர்களுக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

டி.ஜி.பி அலுவலக காவலர்களுக்கு கொரோனா வந்த டிராவல் ஹிஸ்ட்ரி! -அதிர்ச்சியில் அதிகாரிகள் #Corona

இன்று வெளியான பரிசோதனை முடிவில் பயிற்சிக்கு வந்த பெண் காவலர்களில் 10 பேருக்கும், பயிற்சிப் பள்ளியில் பணியாற்றிய ஒரு எஸ்.ஐ மற்றும் 2 தலைமைக் காவலர்கள், ஒரு சிறப்பு பெண் எஸ்.ஐ-க்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதையடுத்து, அவர்கள் 14 பேரும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் இருக்கும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மீதமுள்ள 124 பெண் காவலர்களும் பயிற்சிப் பள்ளியிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், பயிற்சிப் பள்ளியும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு