Published:Updated:

‘பரேட் சல்யூட்...!’- இறந்த சி.ஆர்.பி.எஃப் வீரருக்கு வீரவணக்கம் செலுத்தி உருகிய மகள்

அந்தமானில், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரரின் உடல், சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது. 14 வயது மகள் ‘பரேட் சல்யூட்’ முழங்கி தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழவைத்தது.

செந்தில்குமாரின் மகள் ஸ்ரீதன்யா
செந்தில்குமாரின் மகள் ஸ்ரீதன்யா

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், செந்தில்குமார். மத்திய துணை ராணுவப் படையான சிஆர்பிஎஃப் பிரிவில் அந்தமானில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவந்தார்.

செந்தில்குமாரின் உடலுக்கு மரியாதை
செந்தில்குமாரின் உடலுக்கு மரியாதை

இவருக்கு சந்திரகலா என்ற மனைவியும், 14 வயதில் ஸ்ரீதன்யா என்ற ஒரே மகளும் உள்ளனர். பணியிலிருந்த செந்தில்குமார், கடலில் ராட்சத அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து, அந்தமானிலிருந்து விமானம்மூலம் அவரது உடல் சென்னை விமான நிலையத்துக்கு நேற்றிரவு கொண்டுவரப்பட்டது. அங்கு, சிஆர்பிஎஃப் சார்பில் ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. செந்தில்குமாரின் மனைவி, மகள் மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். 

துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி
துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அஞ்சலி

மகள் ஸ்ரீதன்யா, தன் தந்தையின் உடலுக்கு மரியாதை செலுத்தி ‘பரேட் சல்யூட்’ என்று வீரவணக்கம் முழங்கினார். அப்போது, அனைவரும் கையை உயர்த்தி மரியாதைசெலுத்தினர். பின்னர், சிஆர்பிஎஃப் வாகனம்மூலம் இன்று காலை சொந்த ஊரான வாணியம்பாடிக்கு செந்தில்குமாரின் உடல் கொண்டுவரப்பட்டது. 

அதிகாரிகள், உறவினர்கள், கிராம மக்கள் ஏராளமானோர் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர். அதே பகுதியில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க, முழு ராணுவ மரியாதையுடன் செந்தில்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அங்கும் அவரது மகள் ஸ்ரீதன்யா ‘பரேட் சல்யூட்’ என்று முழங்கினார். 

செந்தில்குமாரின் மகள் ஸ்ரீதன்யா
செந்தில்குமாரின் மகள் ஸ்ரீதன்யா

செந்தில்குமார் உடலின்மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியை சிஆர்பிஎஃப் வீரர்கள் மடித்து ஸ்ரீதன்யாவிடம் கொடுத்தனர். அவர் தேசியக் கொடியை முகத்தில் இறுக அணைத்து முத்தம் கொடுத்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.