``பாய்வோம்...பதுங்குவோம்... அது மட்டும் பண்ண மாட்டோம்!" கிறுகிறு கருணாஸ் | We know how to attack, says karunas

வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (22/10/2018)

கடைசி தொடர்பு:12:04 (27/11/2018)

``பாய்வோம்...பதுங்குவோம்... அது மட்டும் பண்ண மாட்டோம்!" கிறுகிறு கருணாஸ்

நெல்லை மாவட்டம் சிவகிரி நீதிமன்றத்தில் இன்று நடிகர் கருணாஸ் ஆஜரானார். பின்னர் பேசிய அவர், எங்களுக்கு பாயவும் பதுங்கவும் தெரியுமே தவிர பயப்படத் தெரியாது என்று காட்டமாகத் தெரிவித்தார். 

நடிகர் கருணாஸ்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெல்கட்டும்செவலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி பூலித்தேவன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அந்த விழாவில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் கலந்துகொண்டு பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அவரது ஆதரவாளர்களும் பெருமளவில் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

அந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு தேவர் பேரவை மாநிலத் தலைவரான முத்தையா தேவர் வந்தபோது அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது கருணாஸின் ஆதரவாளர்களும் கோஷங்களை எழுப்பினார்கள். அந்த இடத்தில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். அதில், தேவர் பேரவைத் தலைவர் முத்தையா தேவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. 

இது தொடர்பாக கருணாஸ் உள்ளிட்ட 30 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக நெல்லை காவல்துறையினர் கருணாஸை சென்னையில் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றதால் அவரை கைது செய்யும் விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அவர் இன்று சிவகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேஸ்வரன் முன்பு ஆஜராகி ஜாமீன் விவரங்களைத் தெரிவித்தார்.

நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கடந்த 2016-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, பூலித்தேவன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க வலியுறுத்தினேன். அதை அவர் ஏற்று ஆணை பிறப்பித்ததுடன், என்னை அந்த விழாவில் பங்கேற்க அனுப்பி வைத்தார். அடுத்த வருடத்தில், அதே விழாவில் எனது காரை சிலர் உடைத்தார்கள். அந்த வழக்கில் இந்த வருடம் என்னைத் திட்டமிட்டுச் சேர்த்து கைது செய்ய முயன்றார்கள். 

தற்போதைய தமிழக அரசானது, மக்கள் நலனில் கவனம் செலுத்தாமல் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் என்னைப் போன்றவர்களைக் கைது செய்ய முயன்று வருகிறது. முக்குலத்து புலிப்படையைச் சேர்ந்த எங்களுக்குப் பாயவும் தெரியும், பதுங்கவும் தெரியும். ஆனால், பயப்படத் தெரியாது. அரசியல் காழ்ப்பு உணர்ச்சியால் என்மீது தொடரப்பட்ட இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’’ என்றார்.