` குற்றாலத்துக்குச் செல்பவர்களுக்கு கோபாலபுரத்துக்கு வழி தெரியாதா?!'  - கொதிக்கும் ஸ்டாலின் | M.K.Stalin slams T.T.V.Dinakaran supporters

வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (23/10/2018)

கடைசி தொடர்பு:14:26 (23/10/2018)

` குற்றாலத்துக்குச் செல்பவர்களுக்கு கோபாலபுரத்துக்கு வழி தெரியாதா?!'  - கொதிக்கும் ஸ்டாலின்

உண்மையில், எடப்பாடியை எதிர்ப்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார் என்றால், கோபாலபுரத்துக்கு அந்த எம்.எல்.ஏ-க்களை அழைத்து வரட்டும்.

` குற்றாலத்துக்குச் செல்பவர்களுக்கு கோபாலபுரத்துக்கு வழி தெரியாதா?!'  - கொதிக்கும் ஸ்டாலின்

தாமிரபரணி மகா புஷ்கர விழாவின் இறுதி நாளான இன்று, தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் புனித நீராடியுள்ளனர். ` எடப்பாடி பழனிசாமியை எதிர்ப்பது உண்மை என்றால், குற்றாலத்துக்குப் போனவர்கள் கோபாலபுரத்துக்கு அல்லவா வந்திருக்க வேண்டும்?' என மூத்த நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். 

` சென்னை உயர் நீதிமன்றத்தில் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்' என்ற சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களில் சிலர் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளனர். ` இந்தநேரத்தில் வெளிநாடு செல்வது நல்லதல்ல, தீர்ப்பு வரும்போது அனைவரும் இருக்க வேண்டும்' என உறுதியாகக் கூறிய தினகரன், அவர்கள் அனைவரையும் குற்றாலத்தில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் நீதியரசர் சத்யநாராயணன் விரைவில் தீர்ப்பளிக்க இருக்கிறார். `தீர்ப்பு நமக்குச் சாதகமாகத்தான் வரும்' என தினகரன் தரப்பினர் உறுதியாக இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் இந்த விவகாரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ` எம்.எல்.ஏ-க்களைத் தனியாக அழைத்துச் செல்வதன் மூலம், மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். எந்தப் பிரச்னை வந்தாலும் பார்த்துக்கொள்வோம். ஏற்கெனவே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, தினகரன் பக்கம் போனபோது, ` தாராளமாக அவர் செல்லட்டும்' எனக் கூறிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இப்போது குற்றாலத்துக்கு சுற்றுப்பயணம் போனதைப் பற்றியும் அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக வந்தால், மேல்முறையீட்டுக்குத் தமிழக அரசு செல்லும்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில். 

தலைமை செயலகம்

தினகரன் தரப்பினரின் செயல்பாடுகள் குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், `` எடப்பாடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு 25 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. இந்த 18 பேரும் மீண்டும் எம்.எல்.ஏ-க்களாக தொடர்ந்தாலும், அவர்களால் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வர முடியாது. ஏனென்றால், இவர்கள் எல்லாம் அ.தி.மு.கவின் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள். தி.மு.கவின் தயவு இருந்தால் மட்டுமே தினகரனால் சாதிக்க முடியும்" என்றவர், `` திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. சட்டமன்றத்தில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களை கழித்தால் 214 உறுப்பினர்கள் சபையில் உள்ளனர். இந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் வைத்துப் பார்த்தால் 108 பேர் ஆதரவு இருந்தால் போதும். தீர்ப்பு தினகரனுக்குச் சாதகமாக வரும்போது, பெரும்பான்மையை நிரூபிக்க 116 உறுப்பினர்கள் தேவைப்படுவார்கள். எடப்பாடி பழனிசாமி அரசால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போய்விடும். அதுவும் தி.மு.க மனது வைத்தால் மட்டுமே எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும்" என்றார் விரிவாக. 

குற்றாலத்தில் தினகரன் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளது குறித்து, கட்சி சீனியர்களிடம் பேசியிருக்கிறார் ஸ்டாலின். அவர் பேசும்போது, ` குற்றாலம் போவதற்குப் பதிலாக கோபாலபுரம் வந்தால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்துப் பேசலாம். அவர்களை நம்பித் தீர்மானம் கொண்டு வருவதற்கு தி.மு.க தயாராக இல்லை. தீர்ப்பு எப்படியும் வரலாம். இவர்கள் 18 பேரும் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்களே ஆகிவிட்டாலும், இவர்களில் எத்தனை பேர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓட்டுப் போடுவார்கள் எனத் தெரியாது. இவர்களை வைத்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமியிடம் பேரம் நடத்துவதற்குத்தான் வாய்ப்பு அதிகம். `எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் ஒன்றாக இருக்கிறார்கள்' எனத் தினகரன் கூறினார். உண்மையில், எடப்பாடியை எதிர்ப்பதில் தினகரன் உறுதியாக இருக்கிறார் என்றால், கோபாலபுரத்துக்கு அந்த எம்.எல்.ஏ-க்களை அழைத்து வரட்டும். அவர்கள் கோபாலபுரம் வராத வரையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை நாம் கொண்டு வரப் போவதில்லை' எனப் பேசியிருக்கிறார்.