`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார்  | Minister jayakumar about Vetrivel

வெளியிடப்பட்ட நேரம்: 17:24 (23/10/2018)

கடைசி தொடர்பு:17:31 (23/10/2018)

`வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நினைக்கல' - குமுறிய அமைச்சர் ஜெயக்குமார் 

 வெற்றிவேல் மீது சாடும் அமைச்சர் ஜெயக்குமார்

தினகரனின் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் ஒருவருமான வெற்றிவேல், இப்படிச் செய்வாருன்னு நான் நினைக்கல என்று அமைச்சர் ஜெயக்குமார்,ஆதரவாளர்களிடம் குமுறியுள்ளார். 

அமைச்சர் ஜெயக்குமார் குறித்த டாப்பிக்கே அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளத்திலும் அதிகளவில் விமர்சிக்கப்பட்டுவருகிறது. சட்டப்படி பிரச்னைகளை எதிர்கொள்வேன் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார், தன்னுடைய அலுவல்களில் ஈடுபட்டுவருகிறார். அவரின் வீட்டில் உள்ளவர்களும் ஆதரவாளர்களும் ஆடியோ, பிறப்புச் சான்றிதழ் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் எதுவும் விவாதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் தனக்கு நெருக்கமான சிலரிடம் மனம்விட்டு பேசியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். 

ஜெயக்குமாரின் தீவிர ஆதரவாளரான ராயபுரம் தொகுதியைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``சின்ன வயதிலிருந்தே ஜெயக்குமாரை எங்களுக்குத் தெரியும். பொது வாழ்க்கை என்று வந்துவிட்டாலே விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது நல்லதல்ல. ஜெயக்குமாரின் அப்பா வழி உறவுக்கார பெண்ணைத்தான் திருமணம் செய்துகொண்டார். மூன்று குழந்தைகள். ஜெயக்குமார் பிறந்த வீடு, விநாயகபுரம் முதல் தெருவில் உள்ளது. அந்த வீட்டின் அருகில்தான் ஜெயக்குமாரின் அப்பா துரைராஜின் உறவினர்கள் குடியிருந்தனர். ஜெயக்குமாரியைத் திருமணம் செய்த ஜெயக்குமார், ரொம்பவே சிரமப்பட்டு இந்த நிலைமைக்கு உயர்ந்தார். அதற்கு அவரின் அயராத உழைப்பு, விடா முயற்சியோடு ஜெயலலிதா, ஜெயக்குமார் மீது வைத்த நம்பிக்கையே காரணம். 

வடசென்னையில் மீனவர் சமுதாயத்தினர் மட்டுமல்லாமல் எல்லோரிடமும் சகஜமாகப் பழகக்கூடிய நபர் ஜெயக்குமார். இதனால்தான் தொடர்ந்து அவர் ராயபுரம் தொகுதியில் வெற்றி பெற்றுவருகிறார். 5 முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தச் சமயத்தில் அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை அரசியல் ஆதாயத்துக்காக விமர்சித்துவருகின்றனர். தற்போது வெளியான ஆடியோ, பிறப்புச் சான்றிதழ் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்த பிறகும் அதை மையப்படுத்தியே அரசியல் செய்கின்றனர். தினகரனின் ஆதரவாளராக இருக்கும் வெற்றிவேலும் அமைச்சர் ஜெயக்குமாரும் எப்படியிருந்தார்கள் என்பது அ.தி.மு.க-வினருக்கு நன்றாகத் தெரியும். 

சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்த ஸ்டாலினின் பதவியைப் பறிக்க ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருந்தார் ஜெயக்குமார். அப்போது காங்கிரஸ் கவுன்சிலராக வெற்றிவேல், காரத்தே தியாகராஜன் ஆகியோர் இருந்தனர். காங்கிரஸிலிருந்து வெற்றிவேலை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வந்ததில் முக்கிய பங்கு ஜெயக்குமாருக்கு உண்டு. சாதாரண கவுன்சிலராக இருந்த வெற்றிவேல், எம்.எல்.ஏ ஆக வீடு வீடாகச் சென்று ஓட்டுகளை சேகரித்ததில் ஜெயக்குமாருக்கு அதிக பங்கு உண்டு. அது, வெற்றிவேலுக்கும் தெரியும். ஜெயக்குமாரின் முழு தகவல்களும் வெற்றிவேலுக்குத் தெரியும். அ.தி.மு.க-வில் நிலவிய கோஷ்டிப் பூசலின்போது ஜெயக்குமாருக்கு பக்கபலமாக இருந்தவர் வெற்றிவேல். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ், சசிகலா என அணிகள் பிரிந்தபோதும்கூட ஜெயக்குமாரை வெற்றிவேல் விமர்சிக்கவில்லை. ஆனால், ஆர்.கே.நகரில் தினகரன் போட்டியிட்ட போதுதான் ஜெயக்குமாருக்கும் வெற்றிவேலுக்கும் நேரிடையாக மோதல் ஏற்பட்டது. 

அதன் பிறகுதான் இருவரிடையேயுமான கருத்து மோதல் பூதாகரமாக வெடித்தது. தினகரனுடன் இணைந்துகொண்டு ஜெயக்குமாருக்கு எதிரான அஸ்திரங்களை வெற்றிவேல் எடுத்துவருகிறார். ஜெயக்குமாருடன் ஒரு பெண் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பது ஜெயக்குமாருக்குத் தெரியும். தன்னைப் பற்றி முழுமையாக அறிந்த வெற்றிவேல் இப்படிப் பண்ணுவாருன்னு நான் நினைக்கல என்று வருத்தமாக எங்களிடம் அமைச்சர் கூறியபோது அவரை ஆறுதல்படுத்த வார்த்தைகள் இல்லை" என்றனர்.