நீங்கள் குற்றமற்றவரா?- அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆலோசனை சொல்லும் கே.சி.பழனிசாமி  | Kc. Palanisamy advise to minister jayakumar

வெளியிடப்பட்ட நேரம்: 15:18 (24/10/2018)

கடைசி தொடர்பு:15:18 (24/10/2018)

நீங்கள் குற்றமற்றவரா?- அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆலோசனை சொல்லும் கே.சி.பழனிசாமி 

அமைச்சர் ஜெயக்குமார்

``அமைச்சர் ஜெயக்குமார் குற்றமற்றவர் என்றால் வெற்றிவேல் மீது போலீஸில் புகார் கொடுக்க வேண்டும்'' என்று முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ஜெயக்குமார் மீது, தினரகனின் ஆதரவாளரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ஒருவருமான வெற்றிவேல்  பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு ஏற்கெனவே அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்த பிறகும் அந்த விவகாரம் ஓய்ந்தபாடில்லை. இந்தநிலையில் அ.தி.மு.கவைக் காப்பாற்ற வழக்கு நடத்திவரும் முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமாருக்குச் சில ஆலோசனைகளைச் சொல்லியுள்ளார்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறுகையில், ``அ.தி.மு.க.வில் மூத்த அமைச்சரும், மீடியாக்களில் கட்சி ரீதியாகவும் அரசு ரீதியாகவும் பேசக்கூடிய நபருமான ஜெயக்குமாரை தொடர்புபடுத்தி சில தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆடியோ, பிறப்புச் சான்றிதழ் வெளியானதும் அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உடனடியாக பதிலளிக்கவில்லை. அந்த ஆடியோவில் உள்ள குரல், தன்னுடையதல்ல என்றும் பிறப்புச் சான்றிதழில் உள்ள டி.ஜெயக்குமார் என்ற பெயருக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று விளக்கமளித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். 

பழனிசாமி

அதன்பிறகு மீடியாக்களைச் சந்தித்த வெற்றிவேல், அமைச்சர் ஜெயக்குமார் தொடர்புடைய ஆடியோக்கள், ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. இது, ஜெயக்குமாருக்கு மட்டுமல்லாமல் அ.தி.மு.க.வுக்கும் அவமானமாக கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் கருதுகின்றனர். எனவே, ஜெயக்குமார் விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதோடு, வெற்றிவேல் கூறும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்றால் அமைச்சர் ஜெயக்குமார், சட்டரீதியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அதாவது, வெற்றிவேல் மீது போலீஸில் புகார் கொடுக்க வேண்டும். 

அம்மாவின் ஆட்சி என்று சொல்லும் முதல்வரும் துணை முதல்வரும் அமைச்சர்களும் ஜெயலலிதாவைப் போல நடவடிக்கை எடுக்காமல் ஏன் வேடிக்கை பார்க்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 5 அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களில் சிக்கியுள்ளனர். அ.தி.மு.க.வை ஒரு குடும்பத்திலிருந்து மீட்டு இன்னும் சில குடும்பங்களின் கையில் கொடுக்கப்பட்டுள்ளதாக தொண்டர்கள் கவலையில் உள்ளனர். 

எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் விரும்பியதுபோல கட்சியின் பொதுச் செயலாளரை தொண்டர்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும். விரைவில் அ.தி.மு.க.வில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும். அதில் நான் போட்டியிடுவேன். சசிகலாவும் போட்டியிடுவார். சசிகலாவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுவார்களா. சசிகலாவை எதிர்த்து போட்டியிடும் துணிச்சல் அவர்களுக்கு உள்ளதா" என்றார் ஆவேசத்துடன்.