கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கு வட்டி சலுகை நீட்டிப்பு! | co-operative housing,interest concession extends, jayalalitha

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (22/04/2013)

கடைசி தொடர்பு:12:03 (22/04/2013)

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களுக்கு வட்டி சலுகை நீட்டிப்பு!

சென்னை: கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 31.3.2013 வரை வழங்கப்பட்ட வட்டி சலுகைத் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது: 

கடந்த நான்கு ஆண்டுகளாக புதிய கடன்கள் வழங்கப்படாததாலும், கடன் வசூல் பணி மட்டுமே நடைபெற்றதாலும் 1.9.2009 அன்று 2,136 கோடி ரூபாயாக இருந்த தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் கடன் நிலுவைதற்போது 1,280 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்தின் பணியை மேம்படுத்தும் வகையில், 2012-2013 ஆம் நிதி ஆண்டில் வட்டி தள்ளுபடி சலுகைத் திட்டம் ஒன்றை எனது தலைமையிலான அரசு அறிமுகப்படுத்தியது. இதன்படி, கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள குறைந்த வருவாய் பிரிவினருக்கு 75 விழுக்காடு வட்டி தள்ளுபடியும், 100 விழுக்காடு அபராத வட்டி தள்ளுபடியும்; நடுத்தர வருவாய் பிரிவினருக்கு 50 விழுக்காடு வட்டி தள்ளுபடியும், 100 விழுக்காடு அபராத வட்டி தள்ளுபடியும்; உயர் வருவாய் பிரிவினருக்கு 25 விழுக்காடு வட்டி தள்ளுபடியும், 100 விழுக்காடு அபராத வட்டி தள்ளுபடியும் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம் 31.3.2013 வரை செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 34,863 பயனாளிகள் 317 கோடியே 6 லட்சம் ரூபாய் அளவுக்கு வட்டிச் சலுகை பெற்றுள்ளார்கள்.

இதில் அபராத வட்டித் தொகையான 196 கோடியே 26 லட்சம் ரூபாயை கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. வட்டித் தொகையான 120 கோடியே

80 லட்சம் ரூபாயை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த வட்டி தள்ளுபடி திட்டத்தின் மூலம் கடன் வசூல் 2 விழுக்காட்டிலிருந்து 32 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடன் வசூலில் 699 சங்கங்கள் 50 விழுக்காடு வரையிலும், 45 சங்கங்கள் 51 விழுக்காடு முதல் 99 விழுக்காடு வரையிலும், 72 சங்கங்கள் 100 விழுக்காட்டினையும் எய்தியுள்ளன. வசூல் செய்த தொகை 354 கோடியே 44 லட்சம் ரூபாய் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி இணையத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. 100 விழுக்காடு கடன் வசூல் எய்தியுள்ள 72 சங்கங்கள் மீண்டும் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

31.3.2013-ல் தவணை தவறிய உறுப்பினர்கள் 88,356 பேர் உள்ளனர். இவர்களிடமிருந்து தவணை தவறிய அசலாக 633 கோடியே 73 லட்சம் ரூபாய், வட்டியாக 673 கோடியே 67 லட்சம் ரூபாய், அபராத வட்டியாக 543 கோடியே 10 லட்சம் ரூபாய் என மொத்தம் 1,850 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.

கூட்டுறவு வீட்டு வசதி சங்க உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, 31.3.2013 வரை வழங்கப்பட்ட வட்டி சலுகைத் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வட்டிச் சலுகை திட்டத்திற்கு நடப்பாண்டில் 269 கோடியே 21 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும். இந்த வட்டி சலுகை காரணமாக எஞ்சியுள்ள 744 சங்கங்களும் விரைவில் உறுப்பினர்களுக்கு கடன் வழங்க வழிவகை ஏற்படும்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் அதற்கானதவணைத் தொகையை சரிவர செலுத்தாததன் காரணமாக வட்டி, அபராத வட்டி ஆகியவை சேர்ந்து அவர்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரித்தது. இவர்களுக்கும் வட்டிச் சலுகை அளிக்கும் விதத்தில் மாதத் தவணைக்கான அபராத வட்டி தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி நிலை வித்தியாசத் தொகையில் ஒவ்வொரு ஆண்டிற்கும் 5 மாத வட்டி தள்ளுபடி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான
ஒதுக்கீடுகளுக்கு விலையில் நடைமுறையில் உள்ள 10 விழுக்காடு தொகைக்கு மட்டும் வட்டி வசூலிக்க ஆணை என பல்வேறு சலுகைகள் 28.9.2012 முதல் 27.3.2013 வரை அளிக்கப்பட்டன. இதன் மூலம், 6,730 ஒதுக்கீட்டாளர்கள் பயனடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் கிரயப் பத்திரம் வழங்கப்பட்டுவிட்டது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும்
ஒதுக்கீடுதாரர்களிடமிருந்து 150 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இன்னமும் கிரயப் பத்திரம் வழங்கப்படாமல் உள்ள 45,939 ஒதுக்கீட்டாளர்கள் பயன்பெறும் வகையில், இந்த வட்டிச் சலுகைத் திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்காணும் தமிழக அரசின் நடவடிக்கைகளால் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை, எளிய, நடுத்தர மக்களின் கடன் சுமை குறையும் என்பதையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களுக்கு கிரயப் பத்திரம் கிடைக்க வழிவகுக்கும் என்பதையும்
தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்