19 ஈழத் தமிழர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட மாட்டார்கள்: வைகோவுக்கு பிரதமர் உறுதி!

சென்னை: 19 ஈழத் தமிழர்களை துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

துபையில் உள்ள 19 ஈழத் தமிழர்களை, இலங்கைக்கு அனுப்ப துபாய் அரசு திட்டமிட்டு உள்ளது. அவர்களை இலங்கைக்கு அனுப்பினால், கொடூரமான சித்ரவதைக்கும் உயிர்க்கொலைக்கும் ஆளாவார்கள்;  எனவே, அவர்களை இலங்கைக்கு அனுப்ப விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த 2 ஆம் தேதி கடிதம் எழுதினார்.

இது தொடர்பாக, ஏப்ரல் 6 ஆம் தேதி, பிரதமரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு வைகோ பேசினார். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக  வைகோவிடம் பிரதமர் உறுதி அளித்தார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங், வைகோவுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதியிட்ட கடிதத்தில், “ஐ.நா. மனித உரிமை கமிஷன் மூலம், 19 ஈழத் தமிழர்களை துபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பாமல், வேறு நாடுகளுக்கு அனுப்ப, இந்திய வெளிவிவகாரத்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.’
என்று குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல, இந்திய முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்கா வைகோவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஈழத் தமிழர்களை காப்பாற்ற இந்திய அரசுக்கும், வெளிவிவகாரத் துறைக்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கடிதம் எழுதி உள்ளேன்” என்று தெரிவித்து உள்ளார்.

துபாயில் உள்ள ஈழத்தமிழர்கள், குறிப்பாக ஹரிணி, 15 ஆம் தேதி அன்று,  வைகோவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்: “அண்ணா, எங்களை இலங்கைக்கு அனுப்பாமல் காப்பாற்றிய தங்களுக்கு, நாங்கள் காலம் எல்லாம் நன்றிக்கடன்பட்டு உள்ளோம்” என்று கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!