நடைபயணத்தில் வைகோவை சந்தித்த நடிகர் செந்தில்!

கோவை: தாராபுரம் அருகே மதுவிலக்கு கோரி நடைபயணம் மேற்கொண்ட ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை அ.தி.மு.க. பேச்சாளரும், நடிகருமான செந்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகம் முழுவதும் தொண்டர்களுடன் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, 3வது கட்டமாக கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலிருந்து கடந்த 16ம் தேதி நடைபயணத்தை தொடங்கினார்.

6வது நாளான நேற்று (21ம் தேதி) தாராபுரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கினார். தாராபுரம், குளத்துப்பாளையம் அருகே செல்லும்போது, அவ்வழியாக வந்த அ.தி.மு.க. பேச்சாளரான நடிகர் செந்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து பேசினார்.

அப்போது வைகோவுக்கு நடிகர் செந்தில் வாழ்த்து தெரிவித்தார். கடந்த இருதினங்களுக்கு முன்னர் நடைபயணத்தின் போது வைகோ மயக்கமான செய்தியறிந்த நடிகர் செந்தில், வைகோவின் உடல் நலன் பற்றியும் விசாரித்தார். 'தங்களது காமெடி காட்சிகளை தான் விரும்பி பார்ப்பேன்' என்று வைகோ, நடிகர் செந்திலிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடிகர் செந்திலிடம் கேட்டபோது, “மகன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக தாராபுரம் வழியில் வந்து கொண்டிருந்தேன். அப்போது வைகோ நடைபயணம் வந்து கொண்டிருந்தார். அவரை பார்க்காமல் சென்றால் சரியாக இருக்காது என்பதால், அவரை சந்தித்து பேசினேன். உடல்நிலை குறித்து விசாரித்தேன். 'எனது ரசிகர்' என வைகோ என்னிடம் தெரிவித்தார். இதில் குறிப்பிட்டு சொல்ல வேறு ஒன்றும் இல்லை,” என்றார்.

-ஜெ.ரவி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!