``ஃபீஸ் கேட்டால் கொலைமிரட்டல்!" - `ஜெயக்குமார்' விவகார சிந்து தாயார் மீது புகார் | Audio controversy and complaint - what's happening in the Jayakumar - Sindhu's case

வெளியிடப்பட்ட நேரம்: 18:27 (26/10/2018)

கடைசி தொடர்பு:18:27 (26/10/2018)

``ஃபீஸ் கேட்டால் கொலைமிரட்டல்!" - `ஜெயக்குமார்' விவகார சிந்து தாயார் மீது புகார்

சிந்துவும் அவரது குடும்பமும் அரசியல் சூழலுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட, அவர்கள் தமிழகத்திலேயே இல்லை என்று அவர்களின் உறவினர்கள் தெரிவித்தார்கள்.

``ஃபீஸ் கேட்டால் கொலைமிரட்டல்!

மிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஓர் ஆடியோ உரையாடல் வெளியானது. அதில் பேசியிருக்கும் ஆண் குரல் ஜெயக்குமாருடையதுதான் என்று கூறப்பட்டது. அதற்கடுத்து சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த குழந்தையின் தந்தை பெயர் `டி.ஜெயக்குமார்' என்றும், தாயார் பெயர் `சிந்து' என்றும் இருந்தது. இதையடுத்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், `சர்ச்சைக்குரிய ஆடியோவில் இருப்பது என்னுடைய குரல் அல்ல' என்று விளக்கமளித்தார்.

ஜூஸில் மயக்க மருந்து கலந்துகொடுத்து, அமைச்சர் தன்னை ஏமாற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்ட சிந்து, தன்னுடைய அம்மா சாந்தியிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து நியாயம் கேட்கச் சென்ற சிந்துவின் தாயாரிடம், சிந்துவைத் திருமணம் செய்துகொள்வதாக அமைச்சர் ஜெயக்குமார் சொன்னாராம். ஆனால், இதுநாள்வரை அமைச்சர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதால், சிந்துவின் குடும்பம் மிகுந்த சோகத்தில் இருந்திருக்கிறது. இந்நிலையில்தான் கடந்த ஆகஸ்ட் மாதம், சிந்துவுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

ஜெயக்குமார்

``எம்.பி.க்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறது'' என்று சில வாரங்களுக்கு முன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கூறியிருந்தார். தற்போது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அமைச்சர் பாலியல் தொந்தரவு கொடுத்ததற்கான அனைத்து ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், அமைச்சர் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிந்து என்ற பெண்ணைச் சந்தித்து பேசுவதற்காக அவரது வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டியிருந்தது. அருகில் இருப்பவர்களை விசாரித்தபோது, ``இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது'' என்று கூறினார்கள். இந்த விவகாரம் குறித்து ஆரம்பத்திலிருந்தே பேசிவரும் வெற்றிவேலிடம் கேட்டதற்கு, ``என்னிடம் உதவி என்று வந்தார்கள். என்னால் முடிந்த உதவிகளைச் செய்தேன். தற்போது அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது'' என்று முடித்துக்கொண்டார்.

இந்நிலையில் சிந்துவும் அவரது குடும்பமும் அரசியல் சூழலுக்கு பயந்து தலைமறைவாகிவிட்டதா எனச் சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட, அவர்கள் தமிழகத்திலேயே இல்லை என்று அவர்களின் உறவினர்கள் தெரிவித்தார்கள். இதையடுத்து, சிந்துவின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து, அவரைத் தொடர்புகொண்டோம். ஆடியோ சர்ச்சைக்குள்ளான முதல் இரண்டு நாள்களும் அவருடைய தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சிந்துவைத் தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருந்த நிலையில், சிந்துவின் தாயார் சாந்தி பேசினார். ``நாங்களே மன உளைச்சலில் இருக்கோம்மா.. தப்பு நடந்துபோச்சு. இப்போ புள்ளையாகிப் போச்சு. என்ன செய்றதுனு தெரியலை. இப்போ அரசியல் சூழல் நல்லா இல்லை. எங்க மேல பொய் கேஸு போட்டோலும் போடுவாங்க. இப்போ பேசுனா சரியா இருக்காதும்மா. எல்லாம் சரியானதும் பேசுறேன்'' என்று முடித்துக்கொண்டார்.

சிந்து

சிந்துவின் தாயார் பயந்ததுபோலவே, அவர்மீது புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சாந்தி தனக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாக கணேசன் என்பவர் புகார் கொடுத்திருக்கிறார். சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிசெய்து வரும் கணேசனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``சிந்துவின் தாயாரை எனக்கு 2014-ம் ஆண்டிலிருந்தே தெரியும். இரண்டு வழக்குகளில் சிந்துவின் தாயாருக்கு ஆதரவாக வாதாடினேன். அதற்கான கட்டணத்தை இதுவரை சாந்தி கொடுக்கவேயில்லை. நேற்று முன்தினம் மாலை அவரைச் சந்தித்தபோது, கட்டணப் பணத்தைக் கேட்டேன். அதற்கு அவர், என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலைமிரட்டல் விடுத்தார். இதையடுத்துதான் முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் சாந்திமீது புகார்கொடுத்தேன்'' என்றார்.

புகார் கொடுக்கப்பட்டிருக்கும் முந்தியால்பேட்டை காவல் நிலையத்தின் ஆய்வாளர் கமலக்கண்ணனிடம் பேசினோம் ``இந்தப் புகார் தொடர்பாக என்னிடம் எதுவும் கேட்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் கமிஷனர் அலுவலக பி.ஆர்.வோ- வைத் தொடர்புகொண்டு பேசிக்கொள்ளுங்கள்'' என்று சட்டென்று வைத்துவிட்டார்.

ஒருபுறம் அமைச்சர், மறுபுறம் அமைச்சருக்கு எதிரானவர்கள், இன்னொருபக்கம் புகார். இந்தச் சூழலுக்கு நடுவில்தான் எங்கேயோ தங்களை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள் சிந்துவின் குடும்பத்தினர்.


டிரெண்டிங் @ விகடன்