ஜெயிலைவிட மோசமாக இருக்கிறது...! அரசு மருத்துவமனை ஆய்வில் எம்.எல்.ஏ அதிர்ச்சி | mla Pugazhendi inspection in madhuranthakam hospital

வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (28/10/2018)

கடைசி தொடர்பு:07:23 (28/10/2018)

ஜெயிலைவிட மோசமாக இருக்கிறது...! அரசு மருத்துவமனை ஆய்வில் எம்.எல்.ஏ அதிர்ச்சி

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சலுக்கு வரும் மக்கள் தரையில் படுத்துக்கொண்டு சிகிச்சை பெறுவதை விகடன் இணையதளத்தில் இன்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதைத் தொடர்ந்து மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தி மருத்துவமனையை ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மதுராந்தகம் எம்எல்ஏ, டெங்கு ஆய்வு

இதுதொடர்பாக மதுராந்தகம் எம்.எல்.ஏ புகழேந்தியிடம் பேசினோம். “மருத்துவமனையில் நோயாளிகள் படும் துயரங்களை கேள்விப்பட்டு நான் வந்தேன். கடந்த மூன்று நாள்களாக நாள் ஒன்றிற்கு 400 பேர் வருவதாக சொல்கிறார்கள். உள்ளே சென்று சுற்றிப்பார்க்கும் போதே நிறையபேர் காய்ச்சலுக்காக தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். ஆண்கள், பெண்கள் என இருபிரிவாக பிரித்து சிகிச்சை அளிக்கிறார்கள். வார்டு உள்ளே சென்று பார்க்கும் போது சிகிச்சை பெற வந்தவர்களை ஜெயிலில் இருப்பதை விட மோசமாக அடைத்து இருக்கிறார்கள். 40 நோயாளிகள் அந்த அறையில் இருந்தால், 15 கட்டில்கள்தான் இருக்கிறது. வீட்டிலிருந்து சிலர் பாய்களை கொண்டு வந்து தரையில் போட்டு படுத்துக் கொள்கிறார்கள். பெண்கள் இருக்கும் அறைக்கு சென்றால் அங்கே 50 பெண்களுக்கு மேல் இருக்கிறார்கள். ஒரே ஒரு டியூப் லைட்தான் எரிகிறது. இருட்டில் அங்கிருப்பவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனை ஆய்வகத்தில் எந்த உபகரணங்களும் இல்லை. கழிவறைக்கு சென்று பார்த்தால் தண்ணீரே வரவில்லை. காரணம் கேட்டால் மோட்டார் ரிப்பேர் என சொல்கிறார்கள். இதனால் மருத்துவமனைக்கு நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. மக்கள் உயிரிழப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக செய்து கொடுக்க வேண்டும். கடந்த இரண்டு நாள்களில் அரசு உயர் அதிகாரிகளை பார்த்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த இருக்கிறேன். இல்லையென்றால் கட்சித்தலைவரை சந்தித்து போராட்டம் நடத்த உள்ளோம்” என்கிறார்.