`யார் இந்த இன்ஸ்பெக்டர் சீதாராமன்?’ - 7 ஆண்டுக்குப் பிறகும் திருந்தவில்லை  | Details about Inspector seetharaman

வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (29/10/2018)

கடைசி தொடர்பு:23:31 (29/10/2018)

`யார் இந்த இன்ஸ்பெக்டர் சீதாராமன்?’ - 7 ஆண்டுக்குப் பிறகும் திருந்தவில்லை 

இன்ஸ்பெக்டர் சீத்தாராமன்

விஜிலென்ஸ் வழக்கில் சிக்கி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்தான் பணியில் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சீதாராமன் மீது மீண்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நொளம்பூரைச் சேர்ந்த ஜபருல்லா கான் என்பவர், கடந்த மாதம், அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரனைச் சந்தித்து மருத்துவ மேல் படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாகக் கூறி 1.72 கோடி ரூபாயை வாங்கி ஏமாற்றிவிட்டதாக 5 பேர் மீது மோசடி புகார் ஒன்றைக் கொடுத்தார். அந்தப் புகாரை உதவி கமிஷனருக்குப் பரிந்துரை செய்தார் துணை கமிஷனர். உதவி கமிஷனரின் பரிந்துரையின்பேரில் போரூர் குற்றப்பிரிவில் இன்ஸ்பெக்டர் சீதாராமன் புகாரை விசாரித்தார். ஆனால், அவர் சரிவர விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் சட்டப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கர நாராயணன் விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சீதாராமன், காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 

68 வயதாகும் ஜபருல்லா கான் கொடுத்த புகாரில், ``என்னுடைய மகன் பாரூக், துபாயில் வேலைபார்த்து வருகிறார். என் மருமகள் ஷக்கீனா எம்.பி.பி.எஸ் படித்துள்ளார். அவர் எம்.எஸ் படிக்க விரும்பினார். அதற்காக நீட் தேர்வு எழுதினார். தேர்வின்போது சென்னையைச் சேர்ந்த சக்கரவர்த்தி, மருதாச்சலம் ஆகியோர் எனக்கு அறிமுகமாகினர். அவர்கள், போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் என்.ஆர்.ஐ கோட்டாவில் எம்.எஸ் சீட் வாங்கித் தருவதாக என்னிடம் தெரிவித்தனர். அதை நம்பி அவர்களிடம் பேசினேன். அப்போது  நெய்வேலியில் நிறுவனம் நடத்திவரும் பாலாஜி, செல்வராஜை எனக்கு சக்கரவர்த்தியும் மருதாச்சலமும் அறிமுகப்படுத்தினர். அவர்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் உயர்பதவியில் இருக்கும் பர்வீன் என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினர். அதன் பிறகு 5.5.2017-ல் 44 லட்சம் ரூபாயை வாங்கினர். என் மருமகளின் அசல் சான்றிதழ்களை வாங்கினர். அதன் பிறகு 4.1.2018ல் 25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக மொத்தம் 1.72 கோடி ரூபாய் அவர்களிடம் கொடுத்தேன். ஆனால், அவர்கள் எம்.எஸ் சீட் வாங்கித் தரவில்லை. மேலும் அசல் சான்றிதழ்களையும் பணத்தையும் திரும்பத் தரவில்லை. அதைக் கேட்டபோது உன்னால் எங்களை எதுவும் செய்ய முடியாது. உன்னையும் உன் குடும்பத்தினரையும் அழித்துவிடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர்" என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின்பேரில் மூன்று பிரிவுகளின் போலீஸார் வழக்குபதிவு செய்து பிரவீன், செல்வராஜ், பாலாஜி, சக்கரவர்த்தி ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். 

போலீஸ் எப்ஐஆர்

இன்ஸ்பெக்டர் சீதாராமன் குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது பல முக்கிய தகவல்கள் கிடைத்தன. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்தவர் சீதாராமன். இவரின் தந்தையும் தமிழக காவல்துறையில் பணியாற்றியவர். இதனால், சப்-இன்ஸ்பெக்டராக தமிழக காவல்துறையில் சேர்ந்தார். திருமுல்லைவாயல், திருமங்கலம் என சென்னை நகரப்பகுதிகளில் பல காவல் நிலையங்களில் பணியாற்றினார். தமிழக காவல்துறையின் சிறப்பு பிரிவான சி.பி.சி.ஐ.டி-யிலும் சீதாராமன் பணியாற்றியுள்ளார். 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்ற சீதாராமன் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார். பொறுப்பேற்றார். அப்போது லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கியதாக இன்ஸ்பெக்டர் சீதாராமன் மீது லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கு ஏழு ஆண்டுகள் நடந்தன. அதில் சீதாராமன் மீதான குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. இதனால் சில மாதங்களுக்குமுன் போரூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக சீதாராமன் பணிக்குச் சேர்ந்தார். பணிக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே இந்தக் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார்" என்றனர். 

 போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கோடி கணக்கான ரூபாய்  மோசடி புகார் என்றால் அதை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) போலீஸார்தான் விசாரிப்பார்கள். அப்படியிருக்கும்போது போரூர் போலீஸ் நிலையத்தில் 1.72 கோடி ரூபாய் புகாரை எப்படி விசாரித்தார்கள் என்று தெரியவில்லை. புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் சீதாராமன் எப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தால் அவருக்கு எந்தவித பிரச்னையும் ஏற்பட்டிருக்காது. ஆனால், அதை அவர் செய்யவில்லை. இதனால்தான் அவரை காத்திருப்பு பட்டியலில் வைத்துள்ளோம்" என்றார்.