வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (29/10/2018)

கடைசி தொடர்பு:19:15 (29/10/2018)

`எத்தனை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் இருக்கு?’ - பதிலளிக்க தமிழக அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவிபெறும் எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரங்களைத் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளை அறிமுகம் செய்யக்கோரியும் மழலையர் வகுப்புகளைத் தொடங்கக் கோரியும் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், `தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகளும் 12,419 தனியார் பள்ளிகளும் 8,403 அரசு உதவிபெறும் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 1.25 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழக அரசு கல்விக்காக ஆண்டுதோறும் 27,000 கோடி ரூபாய் செலவிட்டு வரும் நிலையில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பை முடித்த பிறகு, ஆங்கிலப் பேச்சு திறன் இல்லாத காரணத்தால், தொழிற்கல்விகளில் சேர முடியாத நிலையும், நல்ல வேலை வாய்ப்புகளைப் பெற முடியாத நிலையில் இருக்கிறது. இதனால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தமிழ் வழி பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும். எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி மழலையர் வகுப்புகள் தொடங்க வேண்டும் எனக் கடந்த மாதம் 15-ம் தேதி அரசுக்கு மனு அனுப்பியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்ததது. அப்போது, அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, எத்தனை பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தையும் எத்தனை பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்ற விவரத்தையும் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒரு வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.