வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (29/10/2018)

கடைசி தொடர்பு:19:30 (29/10/2018)

`ஓ.பி.எஸ் படம் போட்டால் சாணி அடிப்பார்கள்!' - தேனியில் எடப்பாடியார் பேரவையினர் லூட்டி

தேனி மாவட்டத்தில் உருவாகியிருக்கும் எடப்பாடியார் பேரவைதான் கடந்த 15 நாள்களுக்கு மேலாக அ.தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படும் விசயம். இந்நிலையில், தீபாவளி வாழ்த்து தெரிவித்து மீண்டும் எடப்பாடியார் பேரவை பேனர் வைக்கப்பட்டுள்ளதால் தேனி மாவட்ட அ.தி.மு.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எடப்பாடியார் பேரவை

கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டியன் என்பவர், `தேனி மாவட்ட எடப்பாடியார் பேரவை’ என்ற பெயரில் புதிதாக ஓர் பேரவையைத் தொடங்கியிருப்பதாகத் தேனி முழுவதும் 15 நாள்களுக்கு முன்பாகப் போஸ்டர் ஒட்டியிருந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டத்தில் எடப்பாடியார் பேரவை என ஆரம்பிக்கப்பட்டது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜக்கையன்தான் பால்பாண்டியனுக்கு ஆதரவளிப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதை, ஜக்கையன் மறுத்தார். அதைத்தொடர்ந்து ஜக்கையனின் சட்டமன்ற அலுவலகச் சுவரில் ஒட்டப்பட்டிருத்த எடப்பாடியார் பேரவை போஸ்டர் மீது சிவனேசன் என்பவர் சாணி அடித்தார். போஸ்டரில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் படம், பால்பாண்டியன் படம் இரண்டிலும் மட்டுமே சாணி அடிக்கப்பட்டது. மாறாக, ஓ.பி.எஸ் மீது சாணி அடிக்கவில்லை. கைது செய்யப்பட்ட சிவனேசன் ஓ.பி.எஸ் ஆதரவாளர் எனவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று கம்பம் பகுதியில் மீண்டும் எடப்பாடியார் பேரவை சார்பில் பேனர் வைக்கப்பட்டது. அதில் தீபாவளி வாழ்த்துகள் என்று குறிப்பிடப்பட்டிருத்தது. இந்த முறை பேனரில் ஓ.பி.எஸ் படம் இல்லை. இச்சம்பவத்தால் மீண்டும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக, பேனர் வைத்த பால்பாண்டியன் தரப்பில் கேட்டபோது, "கடந்த முறை ஓ.பி.எஸ் படம் போட்டதால், அவரை தவிர மற்றவர்களுக்கு சாணி அடித்தார்கள். அதனால்தான் இந்த முறை அவர் படம் போடவில்லை" என்கின்றனர். தேனி மாவட்டத்தில் அரசியல் மோதல்களில் முதலிடத்தில் போஸ்டர், பேனர் மோதலாகத்தான் இருக்கிறது என்று புலம்புகிறார்கள் பொதுமக்கள்.