வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (29/10/2018)

கடைசி தொடர்பு:20:40 (29/10/2018)

`ஆடியோவை கேட்க முடியவில்லை; என் மகனைக் காப்பாற்றுங்கள்' - கலெக்டர் அலுவலகத்தில் கதறிய தாய்!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தன் மகனை, அங்கு அடித்துத் துன்புறுத்துகிறார்கள். அவன் உடல் முழுக்க காயங்களாக இருக்கிறது. என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதுகொண்டே அவன் பேசும் ஆடியோவை எங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறான். அதைக் கேட்டதிலிருந்து என் மனது தவிக்கிறது எப்படியாவது என் மகனை மீட்டுத் தர வேண்டும் என தாய் ஒருவர் அழுதுகொண்டே கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்த சம்பவம் பார்த்தவர்கள் அனைவரையும் கண் கலங்கச் செய்தது. 

பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவர் மலேசியாவில் உள்ள சலூன் கடையில் கடந்த ஆண்டு முதல் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீரப்பன் வேலை செய்யும் இடத்தில் சிலர் கொடுமைப்படுத்தியதோடு வேலை செய்யவிடாமல் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன வீரப்பன் ஊருக்குத் திரும்பிவிட நினைத்து முதலாளியிடம் கூற அவரும் பார்க்கலாம் சரி எனக் கூறியிருக்கிறார். இதையடுத்து 3 நாள்கள் கழித்து கடையில் 2 லட்சம் பணத்தைக் கையாடல் செய்துவிட்டதாகக் கூறி ஊருக்கு அனுப்பாமல் கடை உரிமையாளர் வீரப்பனை அடித்துத் துன்புறுத்தியுள்ளார். மேலும், குடும்பத்தினருக்கு போன் செய்து 2 லட்சம் பணத்தைக் கொடுத்தால் தான் மகனை ஊருக்கு அனுப்புவேன் என மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாள்களாக மருது ரத்த காயத்துடன் இருப்பதுபோல் உள்ள போட்டோவும் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகவும் பேசும் ஆடியோ ஒன்றையும் வீரப்பன் வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். மேலும், எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அதில் அழுதபடியே கூறியுள்ளார். அதன் பிறகு வீரப்பனின் தாய் இந்திரா அழுதபடியே தன் உறவினர்களுடன் இன்று தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக வந்தார். 

இது குறித்து இந்திரா கூறியதாவது, ``கடந்த 23-ம் தேதி என் மகன் போனில் கடைசியாகப் பேசினான். அதன் பிறகு அவனை தொடர்புகொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் அவன் வேலை செய்யும் இடத்தில் அவனைச் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்துகின்றனர். உடல் முழுக்க காயங்களோடு இருக்கும் படத்தையும் எப்படியாவது என்னைக் காப்பாற்றுங்கள் என அழுதபடி அவன் பேசும் குரலையும் கேட்ட பிறகு என மனது தவிக்கிறது.

குடும்ப கஷ்டத்துக்காகக் கடன் வாங்கி அவனை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால், அங்கே என் புள்ளை படாதபாடு பட்டு வருகிறான். அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்வதற்குள் என் மகனை மீட்டுத் தர வேண்டும் என டி.ஆர்.ஓ.,சக்திவேலிடம் மனு கொடுத்திருக்கிறேன். இரண்டு நாட்களில் மகனை மீட்டுக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறியிருக்கிறார்கள் என்றார். தாய்க்கே உரியத் தவிப்புடன் அழுதபடி அவர் மனு கொடுத்துச் சென்ற சம்பம் பார்ப்பவர்கள் அனைவரையும் கலங்கச் செய்தது.