வெளியிடப்பட்ட நேரம்: 00:40 (30/10/2018)

கடைசி தொடர்பு:00:40 (30/10/2018)

'எடிட்டட் என்றுதான் சொன்னேன்; என்னோட வாய்ஸ் இல்லையெனச் சொல்லவில்லையே' - ஹெச்.ராஜா!

ஹெச் ராஜா

"விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் போலீஸாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பான  வீடியோவில் உள்ளது என்னுடைய குரல் இல்லை என நான் எங்கும்  சொல்லவில்லை. அது  எடிட்டட் வீடியோ என்றுதான் சொன்னேன்" என பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா  கோவையில் தெரிவித்துள்ளார்

கோவையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.அப்போது, " சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பை அமல்படுத்துவதாகக் கூறி இந்துக்களுக்கு எதிரான யுத்தத்தைக் கேரள முதல்வர்  பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். கேரளாவில்  சிரியன் சர்ச் தொடர்பான விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பை இதுவரை கேரள அரசு நிறைவேற்றவில்லை. மசூதிகளில் கூம்பு வடிவ ஆம்ளிபயர் வைக்கக் கூடாது என்று தீர்ப்பு இருந்தும் அதை  அமல்மடுத்தவில்லை. கேரளாவில்  பினராயி விஜயன்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வராக இருப்பார். பாரத தேசத்தில் அர்பன் நக்சல் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பாலின சமத்துவம் பேசி ஐயப்பன் கோயிலை கண்காட்சி  மையமாக மாற்ற கேரள அரசு முயல்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை விமர்சிக்கக் கூடாது என யாரும் சொல்ல முடியாது'' எனவும் தெரிவித்தார்.

 ''சபரிமலை வழக்கு ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்த வழக்கு என்ற தவறான தகவலை பினராயி விஜயன் சொல்லிவருகிறார்.காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் அமைச்சர் சசிதரூர்  தனிப்பட்ட முறையில் நாகரிகமில்லாத நபர். அவர், பிரதமர் மோடியைப் பற்றி விமர்சனம் செய்திருப்பதை  வன்மையாகக் கண்டிக்கிறேன். பா.ஜ.க எப்போதும் இடைத்தேர்தலுக்குத் தயார். பாராளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தினால்தான்  ஊழலைத் தடுக்க முடியும். வரும் மார்ச் மாதத்திலேயே பாராளுமன்றத் தேர்தல் நடத்த வாய்ப்பிருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது உயர் நீதிமன்றம்குறித்து போலீஸாருடன் நடந்த வாக்குவாதம் தொடர்பாக பரப்பப்பட்ட வீடியோவில் உள்ளது என்னுடைய குரல் இல்லை என எங்கும் நான்  சொல்லவில்லை.  நான் பேசியது முழுமையாக இல்லாமல் எடிட் செய்யப்பட்டது என்றுதான் கூறியிருக்கிறேன்'' என தெரிவித்த ஹெச்.ராஜா, ''ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் ராமர்கோயில் விவகாரம் பேசப்படுகிறது என்பது தவறு. நீதித் துறையில் ஏற்படும் காலதாமதம்  காரணமாகவே தற்போது தீர்ப்புத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் பேசப்பட்டாலும் அதற்கு இந்துக்கள் காரணமல்ல'' என்றார்.